/* up Facebook

Nov 12, 2009

மரணம் படர்ந்த முற்றங்கள்- தில்லை




புரையோடிய
ஆதிக்க உணர்வுகளால்
உக்கி புழுத்து ஒடுவச்சு
சீழ்வடிகிறது தேசியம்


விடுதலைக் கனவின்
விபரம் புரியாத
நான் சின்னவளாயிருந்த
ஆயிரத்து தொள்ளாயிரத்து……….சொச்சங்களில்
நான் கேட்கிறேன்
ஏன் பெரியம்மா அழுகிறாய் என்று
இலங்கையை உருக்கி
இரண்டாக உலைவார்க்க
மகன் போய்ற்றான்
இயக்கத்திற்கு என்றாள்


விடுதலைக் கனவின்
விபரம் புரிந்து
நான் பெரியவளாயிருந்த
இரண்டாயிரத்து……….. சொச்சங்களில்
ஏன் என்று கேட்க நாதியற்று
எனது ஊரே அழுதது
வடகிழக்கை உருக்கி
இரண்டாக உலைவார்க்க
எங்கள் மகள்களையும்
மகன்களையும்
பட்டப்பகலிலே
பறிகொடுத்து விட்டோமென்று.


வஞ்சிக்கப்பட்ட தெருக்களிலும்
வீடுகளிலும்
ஓலைக்குடிசைகளிலும்
மோப்பமிட்டலைந்து
கீறி இரண்டாக நிலம்பிளந்து
நிரந்தரங்களை அழித்து
கண்ணிமைக்கும் பொழுதில்
காணாமல் போனது யுத்தம்


போர் ஓய்த பின்பும்
புரையோடிய
ஆதிக்க உணர்வுகளால்
உக்கி புழுத்து ஒடுவச்சி
சீழ்வடிகிறது தேசியம்

0 comments:

Post a Comment

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்