/* up Facebook

Dec 14, 2017

ஆணென்றும் பெண்ணென்றும்… – சி.புஷ்பராணி


நான், எனது நாட்டில் வாழ்ந்த முறைக்கும் இப்போது ஃபிரான்சில் வாழ்வதற்கும் இருக்கின்ற வித்தியாசங்கள் ஆரம்பத்தில் பல விடயங்களில் ஒன்றிப்போக முடியாமல் குழப்பத்தில் ஆழ்த்தியது உண்மை. ஆனால், போகப்போக இங்குள்ளோரிடமுள்ள குணாதிசயங்கள் பல என்னை ஆட்கொண்டு மகிழ்விக்கின்றன…பாசாங்கில்லாத இங்குள்ளோரின் வாழ்க்கை முறை,மனித உணர்வுகளை மதிக்கும் மாண்பு, பாலியல் வேற்றுமையென்று பெரிதும் நோக்காது நட்புரிமை பாராட்டுதல் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.

சமுதாயம், கலாசாரம், பண்பாடு, உறவினர்கள் என்று முகம் கொடுத்துக் கொடுத்தே… என் வாழ்வின் இனிமைகள் அத்தனையையும் ஒன்றுமேயில்லாத சூனிய வெளிக்குத் தள்ளிவிட்டு இழந்தவற்றைத் திரும்பப் பெறமாட்டேனா என்ற ஏக்கத்தின் தழும்புகளை மனதெங்கும் நிறைத்து வைத்திருக்கின்றேனே. இன்றிருக்கும் தெளிவும் துணிவும் அப்போது இல்லாமல் போனது ஏனென்று என்னையே நான் திட்டித் தீர்க்கின்றேன். சின்ன வயதிலிருந்தே ஏதோவொரு விதத்தில் மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ பாலுறுப்புகள் பற்றியே சுட்டிக் காட்டிக்காட்டி… நினைவுறுத்தி, அச்சுறுத்தி வளர்க்கப்பட்ட வீணாய்ப்போன நாட்களை மீட்டுப்பார்க்கின்றேன். அதுவும் எம் சமுதாயத்தில் பெண் பிள்ளைகளை வளர்த்த விதம் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை.

மூடி மூடியே வளர்க்கப்பட்டதால் எம்மையறியாமலே கூச்சம், தயக்கம் எல்லாம் ஒரு சேரத்தாக்கி எமது இயல்பான தன்னம்பிக்கையைத் தேய்ந்து போக வைத்ததை வெறுப்போடு திரும்பிப் பார்க்கின்றேன். நான் சிறுமியாக இருந்தபோது;  உட்காரும்போது, நடக்கும்போது,படுக்கும்போது ஆண்பிள்ளைகள் முன் நடமாடும்போது… என்று ஒவ்வொரு தருணத்திலும் ‘என் அவயங்கள் வெளியே தெரிகின்றனவா?’ என்ற அவதானத்தோடேயே காலம் கழித்ததை இப்போது எண்ணினால் கேவலாயிருக்கின்றது.

பின்னாளில் என் தன்னம்பிக்கையை மீட்டெடுத்ததுக்குப் பக்கபலமாய் நின்றது என் சகோதரனே. பொதுவெளிக்குப் பெண்கள் வரத்தயங்குகின்ற ஒரு காலகட்டத்தில், என் சகோதரனின் அனுசரணையோடு வீட்டை மீறி நான் அரசியலில் ஈடுபட்டதோடு என் துணிச்சல் பட்டைதீட்டப்பட்டது தனிக்கதை.

பெண்களை, ஆண்கள் ஊடுருவிப் பார்ப்பதற்கும் இந்த வளர்ப்புமுறையே வித்திட ஆரம்பித்து.இதுவே ஆண் – பெண் என்ற இடைவெளியைப் பெரிதாக்குகின்றது என்ற உண்மையை உணர்வதென்பது எம்மவர்க்குக் கைவரவே வராது. நான் படிக்கும் காலத்தில் ஆண்பிள்ளைகளோடு கலந்து உட்கார வைக்கப் பட்டதே கிடையாது. எந்தவொரு நிகழ்ச்சியிலும் ஆண்கள் வேறாகவும் பெண்கள் வேறாகவும் தனித்தனியாகக் கலந்துகொண்டனர்.

இப்போது வாழும் நாடான ஃபிரான்ஸில் பள்ளி வாழ்க்கைமுறையை அவதானித்துப் பார்க்கின்றேன். சின்னக் குழந்தைகளிலிருந்தே பள்ளிச்சிறார்கள் பால் பேதமின்றிக் கைகளைக் கோர்த்துக்கொண்டு வரிசையாகப் போவது எவ்வளவு மகிழ்ச்சி தருகின்றது தெரியுமா? சிறு வயதிலிருந்தே பால் பேதமின்றி பிள்ளைகள் வளரவேண்டும். அப்போது தான் ஆண் – பெண் பிள்ளைகளுக்கு அருகமர்ந்து பழகும்போது தேவையற்ற மருட்சியோ சிலிர்ப்போ தோன்ற வாய்ப்பு குறையும்.எதிர்ப்பாலார் நம் சக மனிதர் என்ற உணர்வு தோன்றும்.

பெண்களைக் கண்டவுடன் ஊடுருவிப்பார்க்கும் அநாகாிகத்தை ஆண்கள் உணர்ந்து கொண்டால் பொது வெளியில் பெண்கள் இயல்பாய் இருக்க முடியும்.  பஸ்ஸிலோ ட்ரெயினிலோ பிரயாணம் செய்யும்போது அலட்சியமாக அமர்ந்திருக்கும் நாம், எம் தமிழர்களைக் கண்டால் மட்டும் எம்மையறியாமலே எமது ஆடைகள் சரியாக இருக்கின்றனவா என்று கவனிக்காமல் இருக்கமுடிவதில்லை. பலபெண்கள் இதுபற்றிக் குறைப்பட்டுப் பேசியதைக் கேட்டிருப்பதால் என் கருத்துடன் சேர்த்துப் பன்மையாக எழுதியுள்ளேன். எல்லா ஆண்களும் அப்படியில்லையென்று தெரிந்தும், எம்முள் ஊறிய பொதுவான எண்ணமே எம்மையும் மீறி எச்சரிக்கை  செய்கின்றது.

பிள்ளைகள் வெய்யிலுக்கு ஏற்றவாறு ,சிறிய ஆடைகள் அணிந்து ஆண்- பெண் பேதமற்றுக் குதித்துக் குத்துக்கரணமடித்து ஓடியாடி விளையாடும் கிலேசமற்ற சுதந்திரம் எனக்குக் கிடைக்காமல் போனதன் நெருடலை உணருகின்றேன். வளரும் பருவத்திலிருந்தே… ஆண்  பெரியவன், மதிப்புக்குரியவன், முக்கியமாகப் பெறுமதி வாய்ந்தவன் என்ற மமதையுணர்வும் ஊட்டி வளர்க்கப்படும் பெரும்பாலான ஆண்களுக்கு,  தான் உயர்ந்தவன், ஆதிக்க பலம் கொண்டவன் என்ற உணர்வு இரத்தத்தோடு கலந்துவிடுவதால் தன்னை முன்னிலைப் படுத்துவதற்கு அவன் பாவிக்கும் உத்திகள் வன்முறையில் போய் முடிகின்றன. இதற்கு விதிவிலக்கான  புரிதலோடு பெண்களை மதிக்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். விகிதாசாரத்தில் இப்படிப்பட்டோர் குறைவென்பதே என் கணிப்பு. ஆண்களைப் பலவழிகளில் கொடுமைப்படுத்தும் பெண்கள் பற்றியும் அறிந்திருக்கின்றேன்.இப்படிப்பட்டோரும் எண்ணிக்கையில் மிகக்குறைவே.

பெண்கள் அதிவேகமாக முன்னேறிக் கொண்டேயிருக்கின்றார்கள் என்பது உண்மையாக இருந்தபோதிலும், உலகெங்கும் பெண்கள் கொடுமைக்குள்ளாகும் செய்திகள் எம்மை அதிரவைத்துக் கொண்டுதானிருக்கின்றன. ஆண் என்ற தடிப்போடு வளர்ந்த எம் நாட்டு ஆண்கள் பலரால் நம் பெண்கள் படும்பாடுகள் புலம்பெயர்ந்த நாடுகளில் மோசமாக இடம்பெறுகின்றன என்பது பலர் அறியாத சோகம். இப்படிப் பாதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி என்று வெளியிடுவதில் எனக்கு எவ்விதத் தயக்கமுமில்லை.

பெற்றோர்- உறவினர்கள் மத்தியில் வாழ்ந்த பெண்ணொருத்தி தெரியாத நாட்டுக்கு,அந்நாட்டு மொழியறியாத திகைப்போடு திருமணம் என்ற பேரில் இங்கு வந்து சேர்கின்றாள். இதை ஒரு வாய்ப்பாகக் கொண்டு …தன்னை எதிர்த்துப் பேசப் பெண்ணின் உறவுகள் இங்கில்லை என்ற பலம் அதிகரிக்க, மனைவியைச் சித்திரவதைப்படுத்தும் மனோவியாதி இங்குள்ள ஆண்களிடம் பரவலாகக் காணப்படுகின்றது. எனக்குத் தெரிந்த சில குடும்பங்களிலேயே இவ்வாறான சம்பவங்களை நேரில் அறிந்து நொந்துபோயிருக்கின்றேன். இன்னும் வெளியில் வராமல் மறைக்கப்படும் கதைகளும் நிறையவுள்ளன. இதில் சிலவற்றை இங்கு பகிரலாம் என்று நினைக்கின்றேன்.

கேட்பதற்கு எவருமில்லை என்ற துணிவில், வக்கிரம் பிடித்த ஆண்கள் சிலர் செய்யும் அக்கிரம அடக்குமுறைகளை எதிர்க்கத் திராணியற்ற பெண்கள் பலர் அடங்கியே போகின்றார்கள். சட்டங்களும், சமூக சேவை நிறுவனங்களும் பெண்களுக்கு ஆதரவாக இருந்த போதிலும் பிரச்சினைகளை வெளியில் விடாத பெண்களின் தயக்கமும் அவர்களின் பயம் கலந்த மௌனமும்  மனச்சிதைவின் பிடிக்குள் தள்ளிவிடுகின்றன. சிலபெண்கள் தங்கள் உயிரையே மாய்த்திருக்கின்றனர்.

இலண்டனில் வசிக்கும் என் உறவுப் பெண்ணொருவர் ஃபேஸ்புக்கில் புரபைல் படமாகத் தனது சொந்த முகத்தைக் கொண்ட படத்தைப் போட்டதால் கோபம்கொண்ட கணவன், அவரை அடித்ததில் அப்பெண்ணுடைய வலது கை முறிந்துவிட்டது. ‘கீழே விழுந்தேன்’ என்று பொய் சொல்லிச் சிகிச்சை பெற்றிருக்கின்றார் இந்தப்பெண். இப்போது புரபைல் படமாகத் தானும் கணவனும் சேர்ந்திருக்கும் ஒரு படத்தைப் போட்ட பின்தான் அக்கணவன் நிறைந்துபோயிருக்கின்றான். அம்முகநூல் கணக்கு,  கணவனால் நேரடியாகக் கண்காணிக்கப்படுகின்றது. இதனால் பெரும் மனுவுளைச்சலுடன் முகநூல் கணக்கை மூட நினைத்த போதிலும் அதற்கும் ஏதாவது சந்தேகப்படுவான் என்ற பயத்தில் அவ்வெண்ணத்தையே கைவிட்டு விட்டதாக என்னிடம் கூறி ஆத்திரப்பட்டார் அப்பெண்.

இன்னும் கொடுமையான இன்னொரு பெண்ணின் வாழ்வு; இதில் வரும் ஆணுக்கு வயது முப்பது. இவனும் ஊரிலிருந்தே மனைவியைக் கூப்பிட்டிருக்கின்றான். மனைவி நல்ல அழகி. இதனால்தானோ என்னவோ இவனுக்கு மனைவிமீது சந்தேகம். அது அவனுள் வியாதியாக ஊன்றிவிட்டது. மனைவியைப் படிக்கவிடவோ வேலைக்கு அனுப்பவோ அவனுக்குப் பிடிக்கவில்லை. அவளை வெளியில் போகவிடவே பயந்தான்.வேலைக்குப் போகும்போது கதவைப்பூட்டித் திறப்பைக் கொண்டுபோய்விடுவான்.

இன்னொன்றை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும்.இவர்கள் குடியிருந்த வீடு மிகச் சிறியது. கழிப்பிடம் வெளியில் இருந்தது.குழந்தைகள் மலசலம் கழிக்கும் பிளாஸ்ரிக் கழிப்பான் ஒன்றை வாங்கிவந்து மனைவியிடம் கொடுத்திருக்கின்றான் இந்த கொடுமைக்காரன். அவன் வேலை முடிந்து வந்தபின், அவனோடு சேர்ந்து போய்த்தான் வெளியிலுள்ள பொதுக்கழிப்பறையில் கழிப்பானைச் சுத்தம் செய்யவேண்டும். இதனால் அருவருப்புக் கொண்ட பெண், பல நாட்கள் தண்ணீர் அருந்தாது உணவு கொள்ளாது இருந்திருக்கின்றாள்.

இந்தப்பெண் வீட்டுக்குள்ளேயே பூட்டப்பட்டிருப்பதை எப்படியோ உணர்ந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் போலீசுக்கு அறிவிக்க அவள் மீட்கப்பட்டாள். பெரும் மனச்சிதைவுக்கு ஆளான அந்தப்பெண் நோய்வாய்ப்பட்டு இறந்ததாகச் சில மாதங்களின் முன் இந்தக் கொடுமையான செய்தியை அறிந்தேன். இது நடந்தது லண்டனில். இப்படி எவ்வளவோ சம்பவங்கள் தொடரத்தான் செய்கின்றன.

என் கணவனாக இருந்தவனிடமிருந்து வெளியேற நான் ஏழு வருடங்கள் அல்லாட வேண்டியிருந்தது. இதையெல்லாம் வரி பிசகாமல் புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கின்றேன். இயல்பாய் அமைந்த என் கம்பீரமான என் தோற்றமே அப்போது எனக்கு எதிரியாயிருந்தது. என்னை இவன் கொடுமைப்படுத்துவதை போலீசாரே நம்பவில்லை. பல தருணங்களில் பரிதாபம் வரவழைக்கும் முகபாவத்தோடு இவன் சொன்ன பொய்களே உண்மையென்று சிலர் நம்பினார்கள். ஈற்றில் நீதிமன்றமே என்னை நம்பியது. கணவனிடமிருந்து விடுதலை பெற்றபின்னரே நிம்மதியென்பது என்னவென்பதை உணர்ந்தேன். வெளியில் கொட்டிய வக்கிரம், கோபம், வன்முறை எல்லாவற்றுக்கும் என் மீது இருந்த பொறாமையும் இதன்மீது கொண்ட பயமுமே காரணங்களாகும். என் மீது அன்பு காட்டி அரவணைத்து நடந்தால் தன் கௌரவம் போய்விடும் என்ற ரீதியில் முகத்தைச் சிடுசிடுவென வைத்திருப்பதில் இந்த ஆள் காட்டிய சிரத்தை அதிகம் ‘நான் ஆண்’ என்ற மூர்க்கம்தான் இப்படியான ஆண்களை ஈவு இரக்கமில்லாதவர்களாய் ஆக்கிவிடுகின்றது.தங்களைத் தாங்களே பலிக்கடாக்களாக்கி’இதுதான் நியதி’என்று வாழும் பெண்களும் என் பார்வையில் வெறுப்புக்குரியவர்களே.

அரசியல் வாழ்க்கையில் ஈடுபட்ட காலத்தில் அன்புமிக்க பெண்களை உயர்வாக மதிக்கும் பல ஆண்களை நட்பாகக் கொண்டவள் நான். அவர்களிடம் பெண்களைச் சிறுமைப்படுத்தும் கீழான புத்தி இருந்ததை நானறியேன். ஆனாலும் தலைமை தாங்குவதற்கோ முடிவுகளை எடுப்பதற்கோ பெண் உறுப்பினர்களை அனுமதிக்காத தன்மை அவர்களிடமும் இருந்தன. போராட்டக் குணமுள்ள இளம்பெண்ணாயிருந்த நானே, ஒரு குடும்பத்தில் மனைவி என்ற பாத்திரத்தில் இவ்வளவு துன்பத்தை – அடக்குமுறையைச் சந்தித்திருக்கின்றேன் என்பது நான் எதிர்பார்க்காதது.

பேஸ்புக் , வாட்சப் போன்ற பொது ஊடகங்களையும் சில ஆண்கள் நட்புத்தாண்டி பாலுணர்வுக்கே முக்கியத்துவம் கொடுத்துப் பாவிப்பதை அவதானிக்க முடிகின்றது. வெறும் நட்புக்கு மட்டுமே இடம் கொடுத்து அன்பின் மகத்துவத்தை உணர்ந்து மகிழ இவர்களால் ஏன் முடியாமலிருக்கின்றது? தங்கள் இனிமையையும் தொலைத்துவிட்ட வெறுமையையும் , அன்பைக் கொடுத்து அன்பை வாங்கத்தெரியாதவர்கள் காலங்கடந்தே உணர்கின்றனர்.

நான் முன்பு குறிப்பிட்டதுபோல பாலியல் சமத்துவமின்மை இவர்களைப் போன்றோரை முழுதாக ஆக்கிரமித்திருப்பதே காரணம் என்பேன். இந்தப் பாலியல் சமத்துவம் அற்ற மனோபாவத்திலிருந்துதான் பெண்களை உயர்வாக மதிக்க மறுக்கும் ஆணவமும் பல ஆண்களிடம் பரவலாகத் தென்படுகின்றது. அறிவுசார்ந்த பலரிடம்கூட பெண்களை மட்டமாக எண்ணும் அலட்சியம் மிகுந்திருப்பது வருத்தத்துக்குரியது. பாலியல் தேவைக்காக தங்களது சில்லறைத்தனமான பொழுது போக்குக்காகப் பெண்களை மருட்டித் தம் வசப்படுத்தும் ஆண்களது போலித்தனமும் இதை விடக் குறைந்ததல்ல.

ஆணையும் பெண்ணையும் நிகராகக் கொண்டாடும் ஒரே பார்வை ஆணை வளர்க்கும் பெண்களுக்கும் இருக்கவேண்டும். வீட்டிலிருந்து அம்மாக்கள் மூலமே ஆண்பிள்ளைகளை உயர்வாகவும் பெண்பிள்ளைகளை கொஞ்சம் கீழேயும் வைத்துப்பார்க்கும் ஓரவஞ்சனை ஆரம்பிக்கின்றது.

வீட்டில் தொடங்கி ; படிக்கும் பள்ளிக்கூடம், பழகும் நட்பு வட்டங்கள், வேலை பார்க்குமிடம், ஊடகங்கள், போக்குவரத்து என்று எங்கெங்கும் பாலியல் வேற்றுமையுடன் நோக்கும் குறுகிய பார்வை மாறிட வேண்டும். அன்பும் சமத்துவமும் இங்கேயிருந்துதான் ஆரம்பிக்கின்றன.

நன்றி : ஆக்காட்டி 15(ஒக்டோபர்-டிசம்பர்)
...மேலும்

இலங்கை பெண்களுக்கு இட ஒதுக்கீடு - அதிகாரம் தருமா அரசியல் கட்சிகள்? நளினி ரத்னராஜா


நளினி ரத்னராஜா (பெண்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்)

பல ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைக்கும் முன், இலங்கையில் 1931 ஆம் ஆண்டிலேயே ஆணும் பெண்ணும் சமமான வாக்குரிமை இலங்கையில் பெற்றனர்.

ஆனால் 85 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் இன்னும் இலங்கையில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது மற்றைய தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடும் போது மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இருந்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் 5.8% ஆகவும் (உலக தர வரிசையில் நூற்றி எழுபத்தி ஏழாவது இடத்தில் இலங்கை உள்ளது: Source Inter-Parliamentary Union March 2016) உள்ளூராட்சி மன்றத்தில் 1.8 % ஆகவும் காணப்படுகின்றது.

இந்த நிலையை போக்கக் கோரி பல தசாப்தங்களாக பெண் செயற்பாட்டாளர்கள், பெண் அமைப்புக்கள் குரல் கொடுத்து வந்ததுக்கு பிரதிபலனாக 2017ம் ஆண்டின் 16ம் இலக்க சட்டத்தின் மூலம் உள்ளூராட்சி சபைகளுக்கான புதிய தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் பெண்களுக்கு 25% இட ஒதுக்கீடு உறுதிப்படுத்தப்படுள்ளது என்பது இனிப்பான செய்தியாகும். இந்த முறை பெண்களை அரசியலில் உள்ளீர்த்து கொள்ள கொண்டு வரப்பட்ட உந்துதல் ஆகும். இது சில தசாப்தத்தின் பின் தேவைப்படாது.

இந்த சட்டத்தை நடைமுறைப்படுத்த சகல அரசியல் கட்சிகளுக்கும் எதிர் வரும் ஆண்டு மாசி மாதத்தில் நடைபெற இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஒரு சிறந்த வாய்ப்பாகும். களத்தில் குதிப்பதற்கு பல பெண்கள் தயாராகி வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்கும் காலமிது.

பெண்களின் பங்களிப்பு ஏன் முக்கியம்?

இருந்த போதும் அரசியலில் பெண்களின் பங்களிப்பானது ஏன் முக்கியம் என்பது பலருக்கு இன்னும் புரியாத புதிராகவே உள்ளது. இலங்கையை எடுத்துகொண்டால் நாட்டின் சனத்தொகையில் பாதிக்கு மேல்(52%) பெண்களாகவே காணப்படுகின்றனர்.

ஆகவே ஆண்களைப்போல் பெண்களும் வேறுபட்ட தேவைகளையும் கண்ணோட்டங்களையும் கொண்டிருப்பதால் பெண்களை பிரதிநிதித்துவப்படுத்த சகல தீர்மானம் எடுக்கும் மட்டங்களிலும் பெண்கள் அரசியல் இருக்க வேண்டியது அவசியமாகும்.

மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்த மலையக கட்சிகள் உள்ளது போல், தமிழர்களை பிரதிநிதித்துவபடுத்த தமிழர்களை உள்ளடக்கிய கட்சிகளும் முஸ்லிம்களுக்கு முஸ்லிம் கட்சிகளும் உள்ளது போல் இலங்கையில் உள்ள பெண்களை பிரதிநிதுத்துவப்படுத்த பெண்களும் சகல கட்சிகளிலும் இருப்பது பெண்கள் தங்கள் அரசியல் உரிமைகளை அனுபவிக்க வழி சமைக்கும்.

அரசியலில் பின்வாங்குகிறார்களா?

எல்லா துறைகளிலும் ஜொலிக்கும் பெண்கள் அரசியல் என்றதும் பின் வாங்குவதற்கு பல காரணங்கள் உண்டு . இதில் முக்கியமானது அவளில் சுமத்தப்பட்டிருக்கும் குடும்ப பொறுப்பு. முக்கியமாக அரசியலில் பெண்கள் ஈடுபட்டால் குடும்பத்தை அவர்களால் கவனிக்க முடியாது என்பது மிகவும் உணர்வு ரீதியாக பெண்களை கட்டிப் போடும் கடிவாளம். வேலைக்கு போய் தன் குடும்ப பொருளாதரத்தில பங்கெடுக்கும் பெண் கூட சமையல், குழந்தை பராமரிப்பு என்று வரும் போது முழுப்பொறுப்பும் பெண்ணில் தான் தங்கி உள்ளது.

இதை எல்லாம் பெண்கள் கடந்து வந்தாலும் பெண்களை அரசியலில் ஈடுபடாமல் தடுக்கும் முக்கிய காரணி பெண்களின் நடத்தையை விமர்சிப்பதும் குறை சொல்லுவதுமே. ஒரு குடும்பத்தின், அவள் வாழும் சமூகத்தின் அல்லது இனத்தின் கெளரவமானது பெண்களிலேயே சுமத்தபட்டுள்ளது என்பது கசப்பான உண்மை.

அடுத்த பிரதான கரணம் வன்முறை தேர்தல் கலாசாரம். இதற்கு முன்னைய தேர்தல் முறையும் (விருப்பு வாக்கு முறை) ஒரு காரணம். அதிலும் பெண்களுக்கு எதிரான தேர்தல் காலத்து வன்முறை பெண்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் காரணிகளில் ஒன்று. இதற்கு இலங்கையில் நடந்த பல சம்பவங்கள் சான்று பகர்கின்றன.

இவற்றை எல்லாம் வட்டார ரீதியான புதிய தேர்தல் முறை கணிசமான முறையில் குறைக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த தேர்தல் முறையில் உள்ளூராட்சி சபைகளுக்கான அங்கத்தவர்கள் தெரிவில் 60 சதவீதமான அங்கத்தவர்கள் வட்டார அடிப்படையிலும் 40 சதவீதமான உறுப்பினர்கள் விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

மொத்த உறுப்பினர்களுள் 25 சதவீதம் பெண்கள் உறுப்பினர்களாக இருப்பர். ஏற்கனவே வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் எண்ணிக்கையினை அடிப்படையாக வைத்தே சபையொன்றின் மொத்த அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும். அதாவது, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள வட்டாரங்களின் தொகையினை 60 சதவீதமாகக் கொண்டு அத்துடன் மேலதிகமாக 40 சதவீதத்தினை சேர்த்து அங்கத்தவர் தொகை தீர்மானிக்கப்படும்.

உதாரணமாக சபையொன்றின் வட்டாரங்களின் எண்ணிக்கை 12 என்றால் அது 60 சதவீதமாக கொள்ளப்பட்டு மிகுதி 40 சதவீதத்திற்கும் இன்னும் 08 அங்கத்தவர்கள் சேர்க்கப்பட்டு மொத்த அங்கத்தவர்கள் தொகை 20 ஆக அமையும்.

முதலாவது வேட்புமனுப்பத்திரம் வட்டாரங்களுக்கு பெயர் குறிப்பிட்டு வேட்பாளர்களை நியமிக்கும் வேட்பு மனுவாகும்.

இந்த வேட்புமனுவில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் வேட்பாளர்களை பெயர் குறித்து நியமிக்க வேண்டும். இவர்களுள் குறைந்தது 10 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

இரண்டாவது வேட்பு மனு

இரண்டாவது வேட்பு மனுப்பத்திரத்தில் விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட வேண்டிய 40 சதசவீதமான உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சமனான எண்ணிக்கையுடைய நபர்களும் மேலதிகமாக 03 நபர்களும் சேரக்கப்பட்டு பெயர்கள் வழங்கப்பட வேண்டும்.

இவர்களுள் 50 சதவீதமானவர்கள் கட்டாயமாக பெண்களாக இருத்தல் வேண்டும்.

பெண் அங்கத்தவரின் நியமனம்

ஏனைய கட்சிகளின் வாக்குகளின் விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்ற தேர்தலின் பின்பு தேசியப்பட்டியல் தீர்மானிக்கப்படுவது போன்று குறித்த சபைக்கான ஒதுக்கீடு செய்யப்பட்ட 25 சதவீதமான பெண் அங்கத்தவர்கள் தெரிவு உறுதிப்படுத்தப்படும். இதன் போது கட்சியின் இரண்டு வேட்புமனுக்களில் எதிலிருந்தும் கட்சியின் செயலாளரினால் பெண் அங்கத்தவர்கள் நியமிக்கப்படலாம். இங்கே முழு அதிகாரமும் கட்சியின் செயலாளரின் கையில்தான் தங்கி உள்ளது.

அகவே இம்முறை கிட்டத்தட்ட 2000-க்கும் அதிகமான பெண்கள் உள்ளூராட்சி மன்ற தேர்தல் முறை மூலம் உள்வாங்கப்படுவது உறுதி.

ஆனால் கள நிலவரப்படி, தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் சரியான முறையில் இனம் காணப்பட்டு பட்டியல் 1, பட்டியல் 2 மற்றும் 25% ஒதுக்கீடுகளுக்கான பட்டியலில் வருவார்களா என்பது சந்தேகமாக உள்ளது . இதற்கு பல நடைமுறை சிக்கல்கள் காணப்படுகின்றது. இந்த பட்டியல்களில் தங்கள் உறவின பெண்கள் அல்லது தங்களை எதிர்த்து கேள்வி கேட்காத பெண்கள், அல்லது நாட்டில் வாழாத பெண்கள் உள்ளடக்கப்படுவார்களோ என்ற அச்சம் காணப்படுகிறது

முதலாவது காரணம் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைப்பாளர்கள் காணப்படுகின்றனர். இவர்கள் வெவ்வேறு பெண்களை இனம் கண்டு பட்டியல் தயாரித்து வைத்துள்ளனர். எந்த அமைப்பாளரின் பட்டியல் கட்சி செயலாளரினால் கடைசியாக தெரிவு செய்யப்படும் என்று யாருக்கும் தெரியாது. இதனால் சகல கட்சி பெண்களும் குழப்பத்தில் உள்ளனர்.

இரண்டாவது பெண்கள் தான் வெற்றி பெறக் கூடிய வட்டாரத்தில் போட்டியிட அனுமதிக்காது அவள் சார்ந்த கட்சி அதிக வாக்குகளை பெற முடியாத வட்டாரத்தில் போட்டியிட வைக்க கூடிய அபாயம் காணப்படுகிறது .

இந்த நடைமுறை சிக்கலானது சரியான, ஜனநாயகத்தை மதிக்கும், நல்லாட்சியின் குணாதிசயங்களை கருத்தில் கொள்ளாத சட்டத்தையும் ஒழுங்கையும் மதிக்காத, இனவாதம், மதவாதம் பேசும் பெண்கள் அரசியலுக்கு வந்து சாக்கடை அரசியலை சுத்தம் செய்யாமல் போக நேருமோ என்ற அச்சம் வருவதை தவிர்க்க முடியவில்லை.

பெண்களை அதிகளவில் உள்ளீர்த்து கொள்ளும் சமூகம் அனேகமாக குறைந்தளவு வன்முறையையும் மிகையான சகிப்புத் தன்மையையும் கொண்டிருக்கும்.

முக்கியமாக போரில் உழன்ற சமூகத்தை கொண்ட இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்கு வினைத்திறனான் தீர்வினை பெற்று கொடுக்க உள்ளூராட்சி மன்றங்களின் பெண்களின் பிரதிநிதுத்துவம் இன்றி அமையாதது ஆகும்.

குறிப்பாக, வடகிழக்கில் உள்ள கட்சிகள் அதிக பெண்களை உள் வாங்குவதன் மூலம் நல்லிணக்கமும், சமாதானமும் உண்மையான சமூக அபிவிருத்தியும் போரால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணமும் விரைவில் பெற்றுக் கொள்ள வழி சமைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .

ஆகவே சகல கட்சிகளும் பெண்களின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டு சரியான திறமையான செயல் திறன் உள்ள பெண்களை அரசியலில் சரியான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் களமிறக்கி நாட்டின் நன்மைக்கு வழி சமைப்பார்கள் என நம்புவோமாக.

...மேலும்

Dec 13, 2017

மனம்பேரியிலிருந்து இசைப்பிரியாவரை


மனம்பேரியிலிருந்து இசைப்பிரியாவரை 
கொழும்பில் 

"பால் பாலியல் காமம் காதல் பெண் பெண்ணியம் "

நூல் அறிமுகமும் கலந்துரையாடலும்
19ம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 5.00 மணிக்கு இராமகிருஷ்ண மண்டபத்தில்
...மேலும்

Dec 2, 2017

சுமதியின் "உறையும் பணிப்பெண்கள்" - பாத்திமா மஜீதா


சுமதியின் பிறந்த நாள் பரிசாக . உறையும் பணிப்பெண்கள் நூல் விமர்சனம் சிறுகதையின் மரபார்ந்த முறைக்கு எதிரான சிந்தனையோடும் எழுச்சியோடும் பெண் மொழி, பெண் உடல் மொழி, பெண் புழங்கும் வெளிப் புரிதலோடும் நேசமும் உக்கிரமும் மிக்க கதைப்பெண்களாக உறையும் பனிப்பெண்கள் வெளி வருகின்றார்கள். துணிச்சலும் வெளிப்படைத்தன்மையும் நிறைந்த தனது எழுத்துக்களில், புலம்பெயர்சூழலில் வசிக்கும் பெண்கள் வாழ்வியலை நுட்பமிக்க நகர்வுகளாலான கதைகளாக சுமதி ரூபன் வார்த்திருக்கிறார். மொத்தமாக சிறுகதைகளைக் கொண்டமைந்த உறையும் பணிப்பெண்கள் தொகுதி கருப்பு பிரதிகள் வெளியீட்டகத்தினால் 2010 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது.

பெண்நிலைச் சிந்தனை விரிந்தளாவும் ஒரு மொழியும், வாசகரை கட்டுண்டு கிடக்கச்செய்யும் காட்சிப்படுத்தலும் கதைகளில் நிறைந்திருக்கிறது.
"ஏதோ ஒரு வெளியில் விடுபட்டவளாய் கைகளை அகல விரித்துப்பறந்து கொண்டிருக்கிறேன். இது சுதந்திரத்தின் குறியீடு அல்ல. இருக்கைக்கும் இறத்தலுக்குமான போராட்டம். வானுக்கும் மண்ணுக்குமான இடைவெளி. ஆரம்பத்திற்கும் முடிவுக்குமான தத்தளிப்பு. சிந்தனைகள் மாறி மாறித் தள்ளிவிட வெறுமனே பறந்த வண்ணம் நான்."

இந்த ஒரு பந்தியினுள்ளே இங்கு கூறப்படும் அமானுஷ்ய சாட்சியங்கள் என்ற கதையின் கூறுகளும் கட்டுமானங்களும் ஒட்டுமொத்தத்தின் சாரமாய் வெளிப்பட்டிருக்கின்றன. இளம்வயதிலேயே புலம்பெயர்ந்த தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருக்கும் ஒரு பதின்மவயது பெண் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சித்ரவதைகளை அதன் மூலம் ஏற்படும் மன உளைச்சலை மிகுந்த வலியோடு சொல்கிறது இக்கதை .

அம்பை தான் பங்குபெற்ற நேர்காணல் ஒன்றில் பெண்ணிய எழுத்துகள் பற்றிக்கூறும்பொழுது பெண்ணியச் சிந்தனையை உரக்கக் கூறிக்கொண்டிருப்பது ஒரு பெண்ணிய எழுத்தாளரின் வேலை அல்ல. வாழ்க்கையில் சில நொடிகளில் வெளிவரும் உணர்வுகள், உறவுச்சிதறல்கள், இயற்கையுடன் தொடர்ந்தும் ஒன்றியும் விலகியும் வரும் வாழ்க்கை இவை எல்லாமும் மொழியுமே, எழுத்தின் தன்மையும். இந்த உறையும் பனிப்பெண்களில் வரும் கதைமாந்தர்களில் சிலர் கலகக்குரல்களாக இருக்கின்றார்கள். ஆனால் கூக்குரல் இடுபவர்களாக இல்லை. உதாரணமாக பெண்கள் நான் கணிக்கின்றேன் என்ற கதையில் வரும் நண்பி எனும் பாத்திரம் தனக்கென சுதந்திரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவளாகத் தனித்தன்மை பொருந்தியவளாக இருக்கிறாள். நீ ஏன் இதுவரையில் திருமணமாகாமல் வாழ்கின்றாய் என பலதடவைகள் கேள்வி எழுப்பியும் அவளது பதில் கடைசியாக இவ்வாறு முடிந்தது. நீ சந்தோசமாய் இருக்கிறாய் என்பதை முற்றும் முழுதாக நான் நம்பிறன். ஏன் கலியாணம் கட்டினனீ,பிள்ளைகளை பெத்தனீ என்டு எப்பவாவது கேட்டனானா? என்று தான் தெரிவு செய்து கொண்ட வாழ்வை அசாதாரணமானதாக அணுகுபவர்களிடையே மிகச் சாதாரணமாகத் தன் வினாவை முன்வைக்கிறாள். அமானுஷ்ய சாட்சியங்களில் வரும் நளா, இருள்களால் ஆன கதவில் வரும் மீரா, நாற்பது பிளஸ் கதையில் வரும் ஆஷா, மூளி கதையில் மாமியுடன் உரையாடும் பெண் எனப் பலரின் குரல்கள் கலகம் செய்தல் சுமதியின் கதைக்கூறுகளாக இருக்கின்றன.

இந்தச்சிறுகதையில் இடம்பெற்றிருக்கும் இன்னுமொரு அம்சம் பெண்ணாக இருந்து ஆண் உணர்வை ஆண்மையவாதப் பார்வையை சிறப்பாக கூறியிருக்கிறார். நாற்பது பிளஸ் கதையில் நாற்பது வயதினை அடைந்த மனைவியிடம் தான் எதிர்பார்க்கும் சுகத்தை அடையமுடியாத நிலையில் தனது அலுவலகத்தில் வேலை செய்யும் பெண்ணொருவரிடம் அடைவதற்காக எடுக்கும் பிரயத்தனங்களை ஆண் நிலையிலிருந்து உள்வாங்கிக் கதையாசிரியர் கூறியுள்ளார். இவ்வாறான உணர்வுகளைச் சித்திரிக்கின்ற இடங்களில் சிலவற்றினை விரசமாகவும் விரசமற்ற வகையிலும் கதையின் வசனங்கள் கட்டமைக்கின்றன. பெண்களினை நுகர்வுப்பண்டமாக நோக்கப்படுவதன் அவலமும் கோபமும் கண்டனமும் வெளிப்படுத்துவதன் பொருட்டே ஆண்நிலை உணர்வுகளை, இத்தனை விரசமாக காட்சிகள் கதைகளில் மையப்படுத்தப்பட்டுள்ளன என்று கொள்கிறேன்.

பெண்களுக்கெதிரான வன்முறைகளை தோற்றுவிப்பவர்களாக தனியே ஆண்களை மட்டுமே கூறமுடியாது, இதில் பெண்களும் கணிசமான அளவில் இடம்பெறுகிறார்கள் என்பது வெளிப்படையாகவே ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்.

உதாரணமாக தாங்கள் அனுபவித்த அனுபவிக்கின்ற பாலியல் உணர்வுகளை மற்றவர்கள் அனுபவிக்க முயற்சிக்கும்பொழுது அதை ஏற்றுக்கொள்ளாத ஆணும் பெண்ணும் எம்மத்தியில் உலா வருகின்றார்கள். உணர்வுகளைப் பொறுத்தவரை ஆண், பெண் இருவருக்கும் சமமானதாகவே உற்றுநோக்கப்படவேண்டும். உதாரணமாக பிள்ளைகளின் வயது ரீதியாக ஏற்படும் பருவ மாற்றங்கள், அவர்களுடைய திருமணத்தினைத் தீர்மானிப்பது போன்ற பலவித உணர்வுகளைக் கட்டுப்படுத்துகின்ற ஆயுதம் ஆண், பெண் என்ற பெற்றோரிடமே காணப்படுகின்றன. ரெக்ஸ் என்டொரு நாய்க்குட்டி கதையில் ஒரு நாய்க்குட்டியின் பாலியல் உணர்வுகளைக் குறைப்பதற்காகக் காயடித்துவிட்டு அந்த ஆணும் பெண்ணும் தங்களது சுகங்களை முதிய வயதிலும் அனுபவித்தவாறு குழந்தையை பெற்றெடுத்து வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

உறையும் பனிப்பெண் என்ற சிறுகதையிலும் பெண்ணின் உணர்வுகளைத் தாய், தந்தை, சகோதரன் போன்றோர் சிதைக்கின்ற விடயங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இக்கதையினை வைத்தே இச்சிறுகதை தொகுதி தலைப்பிடப்பட்டுள்ளமையும் இச்சிறுகதை தொகுதியின் முடிவில் இக்கதை முடிவுற்றுள்ளமையும் பொருத்தமாக அமைந்துள்ளது. இத்தொகுதியின் அனைத்து கதைகளிலும் வருகின்ற கதைக்கூறுகள் இக்கதையின் கீழ் ஒட்டுமொத்தமாக குவிக்கப்பட்டுள்ளன. வனஜா திருமணவயதினை அடைந்து பல வருடங்கள் கழிந்திருந்த போதிலும் ஜாதகம் பொருந்தவில்லை என்ற காரணத்தினால் திருமணம் தடைப்பட்டுக்கொண்டே வந்தது. படிப்படியாக வயதினைக் கடந்துபோக வனஜாவின் குடும்பத்திலுள்ள அனைவரும் திருமணத்தினைப் பற்றிய அக்கறையை நிறுத்திக்கொண்டார்கள். வனஜாவின் திருமணம் தொடர்பில் யாராவது கேள்வி கேட்கும்பொழுது அவளது சகோதரனும் பெற்றோரும் எதுவுமே தெரியாதவர்கள் போல வாழப்பழகிக்கொண்டார்கள். அதேநேரம் வனஜாவின் உணர்வுகள் திருமணம் போன்றவற்றினை வயது கடந்துவிட்டது இனி தேவையில்லை என்பதைத் தீர்மானித்து விட்டு தங்களுக்கு வயது சென்றும் தங்களின் சுகங்களை அனுபவிக்கின்ற பெற்றோர், காதலித்த பெண்ணைத் திருமணம் செய்து சந்தோசமாக வாழும் அவளது சகோதரன் என இக்கதா பாத்திரங்களின் சம்பவங்கள் யதார்த்தமாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு ஐம்பது வயதுவரை உலகமே தெரியாத திருமணம் என்றவொரு உணர்வினையே நினைக்காத வனஜாவுக்கு அவளது வீட்டில் புதிதாகத் தங்கியிருக்க வந்த உறவுக்கார ஆணொன்றின் மீது காதலேற்படுகின்றது. வாழ்க்கையின் சில விடயங்களில் பிடிப்பு ஏற்படுகிறது. ஆனால் குறித்த ஆண் வனஜாவின் மீது கொண்டிருப்பது காதலல்ல என்பதை வனஜா அறியும்பொழுது ஏற்படும் வலியுடன் பிரமாண்டமான அந்த வீட்டில் தனியே விடப்பட்ட வனஜா, தனது ஐம்பதாவது வயதில் வாய் விட்டழுததை அந்த வீட்டின் சுவர்கள் கூட கேட்காதது போல முகம் திருப்பி கொண்டன; என்றவாறே கதை முடிவுறுகின்றது.

யாழ்ப்பாண நிலப்பரப்பும் அவை சார்ந்த சம்பவங்களும் சில கதைகளின் இடையிடையே வந்து செல்கின்றன. முழுக்க முழுக்க யாழ்ப்பாணப் பேச்சுமொழியினைக் கதையாசிரியர் கையாண்டுள்ளார். புலம்பெயர்ந்து வாழ்கின்றபோதிலும் தங்களது கலாச்சார பண்பாட்டு விடயங்களை விட்டுவிடவில்லை என்பதையும் இக்கதைகள் உணர்த்தி நிற்கின்றன. உதாரணமாக, சாமத்திய சடங்குகள், பிள்ளைப்பேறு சடங்குகள், சீதன முறைமைகள் போன்றவை தொடர்பிலும் இக்கதைகள் பேசிச்செல்கின்றன.

எனவே இங்கு கூறப்பட்டுள்ள எல்லா கதைகளும் புனைவுகளிலிருந்து விடுபட்டவைகளாக மக்களின் வாழ்வியல் யதார்த்தங்களை, கருத்தியலை முலமாகக்கொண்டமைந்தவையாக உள்ளன. பெண்ணின் சுயத்தினை அக்கறையோடும் நியாயத்தோடும் முன்னெடுத்துச்செல்கின்ற ஆணாதிக்கத்திற்கெதிரான கலகக்குரலையும் தன் இருத்தலுக்கான போராட்டத்தினையும் கொண்ட இன்னுமொரு அழுத்தமான ஆழமான கதைத்தொகுதியை சுமதியிடமிருந்து எதிர்பார்த்தவளாய் நிற்கின்றேன்.
...மேலும்

Nov 30, 2017

பெண்களுக்கு 25 வீத இட ஒதுக்கீடு : எதிர்நீச்சலான அரசியல் - கலா விஸ்வநாதன்


இலங்கையில் ஆண்கள் தொகையை விட, பெண்கள் தொகை அதிகம் என்பதே சனத்தொகை கணிப்பீட்டின் ஆவணப்பதிவாகும். ஆண்கள் தொகையை விட பெண்கள் தொகை அதிகமாக இருந்தபோதிலும், அரசியலில் பெண்களின் பங்குபற்றல் பின்னடைவாகவே இருந்து வருகின்றது.

மலையகப் பெருந்தோட்டங்களில் உழைக்கும் வர்க்கமாக இருக்கும் தொழிலாளர்கள் மத்தியில் அதிக எண்ணிக்கையானோர் பெண்களாகவே இருக்கின்றனர். தற்காலத்தில் ஆண்கள் தோட்டத் தொழிலில் கிடைக்கும் ஊதியம் போதாமையினால் தோட்டத்தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். இதனால் உழைப்பவர் பட்டியலில் பெண்களே முன்னணி வகிக்கின்றனர்.

இவ்வாறான காலகட்டத்தில் உள்ளூராட்சி சபைத்தேர்தல், பல மாறுதல்களை உள்ளடக்கி, விரைவில் வருமென்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்படுகின்றது.

பிரதேச சபை, நகர சபை, மாநகர சபை என்னும் அடிப்படையில் நடைபெறும் உள்ளூராட்சி சபைத்தேர்தலில் ஒவ்வொரு சபைக்கும் 25 சத வீதம் பெண் வேட்பாளர்கள் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் வேட்பாளர்களாக நியமிக்கப்பட வேண்டும் என்று உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டத்தின் மூலம் தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மலையகப் பெண்களும் அரசியலில் பிரவேசிக்க அதிகார பூர்வமாக பாதை திறக்கப்பட்டுள்ளது அல்லது ஆரம்பமாக திணிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி சபைகள் கிராமத்தின் எழுச்சிக்கும் மக்கள் வாழ்வின் வளர்ச்சிக்கும் அடிப்படை வசதிகளை ஆற்றுப்படுத்தக் கூடிய அத்திபாரமான அரசியல் சேவைக்களமாகும். சட்டத்தால் பெண்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் அரசியலில் பங்குபற்றும் வரப்பிரசாதம் மலையகப் பெண்களுக்கும் கிடைக்கும் என்பது சட்டப்படி நிகழ்வாக இருந்தபோதும், சமகாலத்தில் உடனடியாக ஆற்றலுடன் அரசியலில் வீச்சுடன் ஈடுபடக்கூடிய மகளிர் எத்தனை வீதம் மலையகத்தில் உள்ளனர் என்பது கேள்விக்குறியாகும். அப்படி ஒரு சிலர் இருந்து, அரசியலில் ஈடுபட்டு, பிரதிநிதிகளாக வரக்கூடியவர்கள் எத்தனை பேர் என்பதும் ஓர் ஆர்வப்பார்வையாகும்.

இதுகால வரையில் மலையக அரசியலில் பெண்கள் பங்குபற்ற முயற்சித்ததும் இல்லை. பங்குபற்றுவதற்கான பக்கப்பலங்களை பயனுறுதியுடன் வழங்கி அர்ப்பணிப்புடன் உருவாக்க முயன்றதாகவும் தடயம் ஏதுமில்லை.

தொழிற்சங்கங்களில் ஒரு சில பெண்கள் மகளிர் அணி தலைவிகளாக மட்டும் இருக்க மட்டுப்படுத்தப் பட்டிருந்தார்கள். ஓரிருவர் மாகாண சபை பிரதிநிதிகளாக இருந்தனர். திருமதி. சரஸ்வதி சிவகுரு மத்திய மாகாண சபையில் பிரதிநிதியாக தற்போது இருந்து வருகிறார்.

இது பெண்கள் அரசியலில் அடியெடுத்து வைக்க ஆரம்ப முன்மாதிரி அடையாளமாகும். பொதுவாக அரசியல், தொழிற்சங்கங்களில் ஆண் தலைமைத்துவம் மற்றும் பிரதிநிதித்துவம் அதி உச்ச சக்தியாக தோற்றம் பெற்றிருந்தது.

அதுவே தொடர்கிறது. மலையகத் தமிழ் கலாசார சூழலில் பெண் மூலம் பெறக்கூடிய அனைத்து நலங்களையும் பெற்றுக்கொண்டு ஆண்மைக்கு ஆதிக்க அடிமையாகவும் அல்லது அன்பான அடிமையாகவும ஆக்கிக்கொண்டு ஆண் தலைமைத்துவம் நீட்சிபெற்றுள்ளது. அதுவே மலையக அரசியலாகவும் முன்னேறியிருக்கிறது. அந்த மரபில் மாறுதலாக இடஒதுக்கீடு அமையும்.

மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாறுதல்கள் மத்தியில் குடும்பப் பொறுப்புகளை தமதாக்கிக்கொண்டு, சில பெண்கள் சிறப்பாக வாழ்க்கையை செப்பனிட்டு வருகிறார்கள்.

மேலும் தங்கள் பிள்ளைகள் கல்வி கற்று மேன்மையடைய வேண்டும் என்ற கடும் முயற்சியை பெண்களே முன்னெடுத்து வருகின்றனர். “நம்ம காலந்தான் இப்படி போச்சி, நம்ம புள்ளங்களாவது நல்லா படிச்சு, நல்ல நெலமைக்கு வரணும்” என்பது இன்றைய அனேக மலையகப்பெண்களின் எண்ணக்கருவாகும்.

அந்த வகையில் மலையகப்பெண்கள் ஆண்களுக்கு சற்றும் சளைத்தவர்கள் அல்ல. அவர்களுக்குரிய சந்தர்ப்பங்கள் அமையவில்லை என்பதுவே நிதர்சனமாகும். நிதானமாகவும், தூர நோக்குடன் முடிவெடுக்கும் திறன் இயல்பாகவே மகளிரிடம் இருக்கும் சிறப்பம்சமாகும்.

 கல்வி ஞானத்தில் பின் தங்கியிருந்தபோதும் கேள்வி ஞானத்தில் கீர்த்தியான காரியங்களை நேர்த்தியாக செய்யக்கூடிய ஆற்றல் இயல்பாகவே இருப்பதை மலையக் தாய்மார்களிடம் காணலாம். சமூக களத்தில் செயல்படும் நிர்வாகத்திறன், பேச்சாற்றல் அனைவரையும் கவர்ந்து அரவணைத்துச் செல்லும் சாமர்த்தியம் ஆகியவற்றை முறைப்படி கற்பதற்கு மலையக அமைப்புகள் பயிற்சிபட்டறையை உடன் தொடங்குவதும் உந்து சக்தியாகும். 

அரசியலில் பிரதிநிதித்துவம் வகிக்கும் ஆற்றலை மலையகப் பெண்கள் கட்டாயம் அடைய வேண்டும் என்பது இடஒதுக்கீடு சட்டத்தால் ஏற்படுத்தப்பட்டதனால் நிர்ப்பந்தம் காரணமாகவே மலையகப்பெண்கள் அரசியலில் களம் இறங்கும் எதிர்நீச்சல் நிலைக்கு ஆளாகியுள்ளனர்.

எதிர்நீச்சல் என்று குறிப்பிடுமிடத்து ஆண்களின் அதிகார, அடாவடித்தன ஆள்பல அணிசேர்க்கை, அத்துடன் அதற்கு பக்கபலமான மதுபரிமாறல், அதன் தொடராய் அநாகரிக அரசியல் வன்முறைகள், ஏச்சுகள், பேச்சுகள் மத்தியில் பெண்கள் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு ஆகிய நாற்படையுடன் அரசியல் களத்தில் குதிப்பது வெள்ளமாய் பிரவாகம் எடுக்கும் கங்கையில் எதிர்நீச்சல் போடும் கடுமையான முயற்சியாகும்.

முயற்சித்தால் முடியாதது ஒன்றுமில்லை. ஆகவே மலையகப்பெண்கள் அரசியலில் பங்காளிகளாக மாறுவதற்கு , மலையகட்சிகள், தலைவர்கள் தெளிவான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதன் மூலம் நிச்சயம் 25 சதவீத இடஒதுக்கீட்டில் நியாயமான அறுவடையை மலையகப்பெண்கள் பெறக்கூடியதாக இருக்கும்.

மலையகக்கட்சிகள் பெரும்பாலும் தேசியக்கட்சிகளில் கூட்டாகவே சேர்ந்து போட்டியிட முனையும் பட்சத்தில் மலையகப்பெண்கள் பிரதிநிதித்துவத்தை தேசியக் கட்சிகளுக்கு தாரைவார்த்துவிடக்கூடாது. பிரதேச, நகர, மாநகர சபைக்குள் வசிக்கும் தமிழ் வாக்காளர்கள் விகிதாசாரத்துக்கேற்ப மலையகப்பெண்கள் உள்வாங்கப்பட வேண்டும். நேரடி தேர்தல் போட்டியை விட, 40 வீத விகிதாசார பிரதிநிதித்துவத்திலும் பெண்களுக்கென குறிப்பிட்ட சிறப்பு தேர்வு முறை இருப்பதினால், இம்முறையிலும் மகளிர் பிரதிநிதித்துவத்தைப் பேண முடியும். பேரம் பேசுதலில் இது விடயம் ஆணித்தரமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

மலையகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சமூக, சமய அமைப்புகளில் ஈடுபட்டு வரும் பெண்கள் விழிப்புணர்வு, நிர்வாகத்திறன் , பேச்சாற்றல், தலைமைப்பண்பு கொண்டவர்களாக உருவாகியுள்ளார்கள், உருவாகிவருகிறார்கள். கட்சிக்கொள்கை, சித்தார்ந்தம் என்ற கோட்பாடுகளை கடந்து சமூக நலனில் நாட்டங்கொண்ட சமூக சேவையில் ஆர்வம் உள்ளவர்களே அவசர தேவைகருதி வேட்பாளர்களாக நியமிக்க, ஆய்ந்துணர்ந்து முடிவெடுக்கலாம்.

25 வீத இட ஒதுக்கீடு பெண்களுக்கு என்பதால் தமது உறவுகள், நட்புகள் என்ற அடிப்படையில் பெயர்ப் பட்டியலைப் பூர்த்தி செய்ய முனைவது பெண்களுக்குச் செய்யும் அரசியல் துரோகமாகும்.

இனிவரும் எல்லாத் தேர்தல்களிலும் 25 வீதம் பெண்களுக்கு இடஒதுக்கீடு என்பது சட்டமாகி இருப்பதால் அரசியலில் ஆர்வம் உள்ள மகளிர், சமூகப்பணியில் பகுதி நேரமாக ஈடுபடுபவர்கள். தமது அரசியல் அறிவை மேம்படுத்திக்கொள்வதோடு தமக்குப் பிடித்த அரசியல் கட்சிகளில் இணைந்து தங்களைத் தயார்படுத்திக் கொள்வது எதிர்காலத்துக்கு ஏற்புடையதாகும். சமூக நலன்சார்ந்த விடயங்களில் அக்கறையும், சமகால நிகழ்வுகளை அறியும் கூர்மையும், வாசிப்புத் திறனையும் வளர்க்க சகலமும் நம் வசமாகும்.

அரசியல் கட்சிகளும், சமூக, சமய அமைப்புகளும் இதற்கான ஆற்றுகையை பெண்களின் முன்னேற்றம் கருதி நெறியாள்கைப்படுத்தினால் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் மலையகத்திலிருந்து இரண்டு பெண்கள் தெரிவாகும் புதிய ஆரோக்கியமான மாற்றம் ஏற்படும்.

இட ஒதுக்கீடு மாற்றத்தை பயன்படுத்திக்கொண்டு, பெண்களுக்கு உரிய இடமும், சந்தர்ப்பமும் சார்ந்து நில்லாத சமத்துவமும் நல்கினால் சமூகம் சகல துறைகளிலும் சடுதியாக முன்னேறும். ஆதலால், பெண்களை அடிமட்டத்திலிருந்து உற்சாகப்படுத்தி, அரசியல் ரீதியாக அற்புதசக்தியாக வலுப்படுத்துவதற்கு ஆக்கமும் ஊக்கமும் அனைவரும் வழங்க தயாராகி முன்வர வேண்டும்.

உள்ளூராட்சி சபைத்தேர்தல் நடக்கும் காலம் கிட்டியிருப்பதால், ஆர்வமும் அசைக்க முடியாத துணிச்சலும் கொண்டு, குறுகிய காலத்திலும் வெற்றிப்படிகளில் வீரநடை போட முடியும். இட ஒதுக்கீடு இனி ஒரு விதி செய்ய ஏற்ற மாற்றுவழியாக மலர்ந்திருக்கின்றது வேட்பாளர் பட்டியலில் பெண்கள் பெயரை மட்டும் பதிவு செய்துவிட்டு, வெற்றி வாய்ப்பை ஆண்களே பெறும் கபடம் இந்த உள்ளூராட்சித் தேர்தலில் எடுபடக்கூடாது. பெண்கள் அனைவரும் தமது வாக்குகளை பெண் வேட்பாளருக்கே அளித்து பெண் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதற்கு, முழு முயற்சியாக ஐக்கியப்பட வேண்டும். அப்போதுதான் இந்த இடஒதுக்கீட்டின் நன்மையை நாம் அனுபவிக்க முடியும்.

நன்றி - வீரகேசரி
...மேலும்

Oct 14, 2017

கௌரி லங்கேஷ் படுகொலை குறித்து குங்குமம் தோழி இதழில்...


அறிவியலுக்குப் புறம்பான நம்பிக்கைகளை உடைக்கும் பகுத்தறிவு சிந்தனையாளர்களை மத அடிப்படைவாத சமூகம் எப்படி எதிர்கொண்டதை என்பதை வரலாறாக நாம் படித்திருக்கிறோம். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மேற்குலகைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள், மத அடிப்படைவாதிகளால் மூர்க்கமாக வேட்டையாடப்பட்டார்கள். ரத்தக்கறை படிந்த அந்த வரலாற்றை நமக்கு மீண்டும் நினைவுபடுத்துகின்றன, நம் அருகாமை மாநிலங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் படுகொலைகள்.

கடந்த நான்காண்டுகளில் நடந்த பகுத்தறிவாளர்களும் சமூக செயல்பாட்டாளர்களுமான பன்சாரே, தபோல்கர், கல்புர்கி ஆகியோரின் படுகொலைகள் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. அந்த அதிர்வு அடங்காத நிலையில், பத்திரிகையாளரும் அடிப்படைவாத இந்துத்துவ கருத்துக்களை எதிர்த்தவருமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படுகொலைகள் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகுதான் நடத்தப்படுகின்றன என்கிற கருத்து இருக்கிறது. பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, அதன் அஜெண்டாவான் ‘இந்துராஷ்டிரம்’ கோருகிற துண்டு துக்கடா அமைப்புகள் அனைத்தும் மிகத் தீவிரமாகவும், சுதந்திரமாகவும் செயல்பட ஆரம்பித்துள்ளன என்பதை தினந்தோறும் பார்க்கிறோம். ஆனால், சனாதானத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் எல்லா ஆட்சிகளின்போதும் பெரும்பான்மை மக்களின் மத அடையாளத்துக்குள் ஒளிந்துகொண்டு தங்களை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் மத அடிப்படைவாதத்தை பரப்ப சடங்குகள்-யாகங்கள்-பாரம்பரியத்தை மீட்டெடுத்தல் போன்றவற்றை தூக்கிப் பிடித்து பிரச்சாரத்தை மேற்கொண்டார்கள். இந்தப் பிரச்சாரத்துக்கு எதிர் பிரச்சாரம் செய்ய கிளம்பிய பகுத்தறிவாளர்கள்தாம் படுகொலை செய்யப்பட்ட பன்சாரே, தபோல்கர், கல்புர்கி, கௌரி லங்கேஷ் ஆகியோர்.

2008-ஆம் ஆண்டு கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைக்க முனைந்த போதும், ஆட்சியமைத்த பிறகும் பாஜக-சங்பரிவார் அமைப்புகளின் அடிப்படைவாத செயல்களை நுணுக்கமாக கண்டுணர்ந்து எழுதிவந்தவர் கௌரி லங்கேஷ். கர்நாடகம், தென்னகத்தின் குஜராத்தாக மாறிக்கொண்டிருப்பதாக அவர் அப்போதே எழுதினார். கர்நாடகம், மகாராஷ்டிர மாநிலங்கள் அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு பெயர் பெற்றவை. அடிப்படைவாத செயல்கள் மூலம் பெரும்பான்மை சமூகத்தின் உணர்வுகளைத் தூண்டி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய அவர்கள், தங்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக கருதுவது, தங்களுடைய பேனா முனையால் போரிட்டுக்கொண்டிருக்கும் இந்த எளிய மனிதர்களைத்தான். இவர்களை பட்டியல் போட்டு, படுகொலை செய்கிறார்கள். ‘நாங்கள் அடுத்து இவர்களைத்தான் படுகொலை செய்யப்போகிறோம்’ என அடிப்படைவாதிகள் வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். எதிர் அரசியல் பேசினாலும் ஆட்சியாளர்களால் இவர்களை நெருங்கக்கூட முடிவதில்லை.

பொது சமூகமாக இந்தப் படுகொலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? பொது சமூகத்தின் நல்லிணக்கத்துக்காகவும் மூடக்கருத்துகளை எதிர்த்தும் நம்மில் ஒருவராக வாழும் கௌரி லிங்கேஷ் போன்றோரை பாதுகாப்பது எப்படி? சமூகத்தின் மனசாட்சியாக விளங்கும் இவர்களை நாம் கைவிடக்கூடாது இல்லையா? சாதியின் பேரால், மதத்தின் பேரால் நம்மை பிரித்தாள நினைக்கும் சக்திகளை நாம் ஒருபோதும் ஆதரித்துவிடக்கூடாது. அதைத்தான் நாம் முதன்மையாக செய்ய வேண்டும். தமிழகம், பகுத்தறிவாளர்களின் பிறப்பிடம். இங்கே அடிப்படைவாதம் தன்னுடைய வேலையைக் காட்ட பெரும்பாடுபடுகிறது. ஆனால், அடிப்படைவாதிகள் நெருங்கிவிட்டார்கள்! அவர்கள் வளர்ச்சியின் பேரால் நம்மை ஒருங்கிணைப்பார்கள், ஊழல் எதிர்ப்பு பேசுகிறோம் என்பார்கள். ஒருபோதும் அவர்கள் சொல்லும் வாக்குறுதிகளை நம்பிவிடாதீர்கள். அனைத்தும் பொய்யின் மேல் கட்டப்பட்ட போலி பிம்பங்கள். இந்த போலிகளை நம்பி இறங்கினால், நம்மின் மனசாட்சிகளாக வளம் வரும் கௌரியையோ கல்புர்கியையோ இங்கேயும் பலிகொடுக்க வேண்டியிருக்கும். மனசாட்சியில்லாத சமூகம் காட்டுமிராண்டித்தனமாக மாறிவிடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அங்கே அமைதியும் வளர்ச்சியும் இருக்காது...வெறித்தனம் மட்டுமே இருக்கும்!

நன்றி: கி.ச. திலீபன், குங்குமம் தோழி டீம்...
...மேலும்

Oct 10, 2017

தமிழீழ ஒறுப்புச் சட்டமும், பெண்களின் உரிமைகளும் - என்.சரவணன்


இக்கட்டுரையை 1996 - ஏப்ரல் 20 இல் வெளியான சரிநிகர் பத்திரிகையில் எழுதியிருந்தேன். அப்போது தமிழீழம் என்கிற ஒரு அரசாங்கம் இயங்கிக் கொண்டிருந்த காலம். விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழீழ குற்றவியல் சட்டத்தில் (Penal code of tamil ealam) பெண்களின் நிலை பற்றியது இந்தக் கட்டுரை. இக்கட்டுரையில் தான் தமிழ்ச் சூழலுக்கு முதல் தடவையாக “கற்பழிப்பு” என்கிற பதத்துக்கு மாற்றுப் பதமாக “பாலியல் வல்லுறவு” என்கிற சொல்லை அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். அச்சொல்லை முதலில் புழக்கத்துக்கு கொண்டுவந்ததும் சரிநிகர் பத்திரிகை தான். தற்போது பெண்கள் தொடர்பான சில சட்டங்கள் விவாதத்துக்கு வந்துள்ள நிலையில் காலப்பொருத்தம் கருதி மீளவும் இங்கே
-என்.சரவணன் 
இன்று தென்னிலங்கையில் எவர் விரும்புகிற அல்லது விரும்பாத போதும் ''தமிழீழம்"" என்கின்ற அரசாங்கம் ஒன்று இயங்கி வருவதை நாம் அறிகிறோம். அந்த அரசாங்கம் அரசொன்றைக் (State) கொண்டிராத போதும் அரசாங்கம் ஒன்று அங்கு இயங்கிக் கொண்டிருப்பதை எவரும் மறுக்க மாட்டார்கள்.

அந்த வகையில் வடக்கில் எழுதப்படாத அரசியலமைப்பொன்று நடைமுறையில் இருக்கத் தான் செய்கிறது. அந்த எடுகோளிலிருந்து வடக்கில் அமுலாக்கப்பட்டிருக்கிற சட்டங்களை அலசிப்பார்ப்பது அவசியமானதொன்றே. அந்த வகையில் ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்"" (Penal Code of Tamil Ealam - PCTE) ('தண்டனை' இங்கு ''ஒறுப்பு"' என அழைக்கப்படுகிறது.) முக்கியமான ஒன்று.

அச்சட்டத்தில் பெண்களது உரிமை பேணப்பட்டிருக்கிறதா? என்பதை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம். அதில் பெண்களுக்கான உரிமை பாதுகாக்கப்படக்கூடிய வகையில் சட்டம் ஆக்கப் பட்டிருக்கும் என்ற நம்பிக்கை கூட இருக்கிறதா? என்ற வினாவை ஒரு சிலர் எழுப்பக்கூடும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனது பொன்மொழிகள் என சொல்லப்படுப வையோடு இது எத்தனை தூரம் பொருந்துகிறது என்கின்ற கேள்வியை எழுப்பிக் கொண்டு இது பற்றிய விமர்சனங்களை முன்வைக்கலாம் என்று தோன்றுகிறது. வே.பிரபாகரன் சொன்னதை இங்கு நோக்குவோம்.

'பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்குமுறையில் இருந்தும் விடுதலை பெற்று ஆண்களுடன் கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல் -தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன்" (ஆதாரம்:- நாற்று-2வது இதழ்-மாறன் பதிப்பகம், பக்கம்-6, தமிழீழ பெண்கள் ஆய்வு நிலையம்)

''ஆணாதிக்க ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம் என்பது ஆண்களு க்கு எதிரான போராட்டம் அல்ல. இது ஆணாதிக்க அறியாமைக்கு எதிரான கருத்துப் போராட்டமாகும்." (அதே நூல்-பக்கம்-31)

''பெண் விடுதலை என்பது அரச ஒடுக்குமுறையில் இருந்தும் சமூக ஒடுக்கு முறையிலிருந்தும் பொருளா தாரச் சுரண்டல் முறையிலிருந்தும் விடுதலை பெறுவதேயாகும்." (அதே நூல்- பக்கம்-35)

நடைமுறையில் உலகமெங்கும் சகல ஆட்சி நிர்வாக துறைகளிலும் ஆண்களது செல்வாககும் மேலாதிக்க முமே நிறைந்து காணப்படுவதை எவரும் அறிவர். சட்டமியற்றுதல், அதனை பிரயோகித்தல், என்பனவற்றைக் கூட ஆண்களே மேற்கொள்கின்றனர். எனவே ஆண்நிலைப்பட்ட ஆணாதிக்க தீர்மாணங்களும், முடிவுக ளுமே பொதுவாக பெண்கள்மேல் திணிக்கப்படுகிறது. எனவே பெண்கள் தொடர்பான மரபு ரீதியான கருத்தியல் சிந்தனையிலிருந்து வெளிவரும் சட்டங்களினால் பெண்கள் பல்வேறு முறைகளில் பாதிப்புக்குள்ளாகி வருவது சர்வசாதாரண நிகழ்வாகியு ள்ளது. அந்த எடுகோளுடன் பார்த்தால் 'தமிழீழ ஒறுப்புச் சட்டம்" கூட இவ்விடயத்தில் விதிவிலக்கல்ல. இனி ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.


தண்டனை
தண்டனைக்குரிய பதமாக தமிழீழ ஒறுப்புச் சட்டத்தில் "ஒறுப்பு" எனும் பதம் பிரயோகிக்கப்படுகிறது. இந்த தண்டனை விடயத்தில் எவருக்கெல் லாம் தண்டனை விதிக்கப்படல் வேண்டும் எனும் வறையறைக்குள் கீழ்வருமாறு கூறப்பட்டுள்ளது.

''குற்றவாளியாகக் காணப்படும் காலத்தில் கருவுற்றிருக்கும் பெண்ணுக்கு எதிராக மரண தண்டணை விதிக்க ப்படலோ, பதியப்படலோ ஆகாது. ஆனால் அதற்கு மாறாக கடுஞ்சிறை யொறுப்போ எளிய சிறையொறுப்போ வழங்கலாம்" (பார்க்க-PCTE-சரத்து-47)

கருவுற்றிருக்கும் காலத்தில் பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கக்கூடாது என சொல்லப்பட்டது சரி. ஆனால் கருவுற்றிருக்கிற பெண்ணுக்கு கடுஞ்சிறையொறுப்பு வழங்கலாம் என்ற விடயம் பாரதூரமானது. "கடுஞ்சிறையொறுப்பு" என்பதன் அர்த்தம் கடுமையான உடல் உழைப்போடு கூடிய தண்டனை என்பது குறிப்பிடத்தக்கது. (பார்க்க-PCTE-சரத்து-45.ஆ(1)).

ஏற்கனவே கருவளச் சுமை பெண்ணிடம் சுமத்தப்பட்டுள்ள நிலையில் "கடும் உடலுழைப்பு" என்பது மிகவும் மோசகர மான தண்டனையாகவே கொள்ள முடியும்.

அது தவிர அந்த குறிப்பிட்ட பெண்ணுக்கு மாத்திரமல்லாது கருவுற்றிருக்கும் அப்பெண்ணின் கருவளத்திற்கும் ஏற்படுத்தும் உடல், உள ரீதியிலான தண்டனையாகவே இதனைக் கொள்ள முடியும்.

எனவே, செய்த குற்றத்திற்கான தண்டனையாக எளிய சிறையொறுப்பு போதுமானதெனலாம் அதிலும் கருவுற் றிருக்கிற நிலையில் சிறைக்குள் அவளது செயற்பாடுகளுக்கான சுதந்திரம் வழங்கப்பட்டிருத்தல் வேண்டும்.


கருக்கலைப்பு

கருக்கலைப்பு சுதந்திரமென்பது ஒவ்வொரு பெண்ணினதும் அடிப்படை உரிமையாதல் வேண்டும்.

ஒறுப்புச் சட்டத்திலும் இது விடயத்தில் பிழையான அணுகு முறைகளையே காணக்கூடியதாக இருக்கிறது. உதாரணமாக:

உயிரைக் காப்பாற்றும் நோக்குடன் மட்டுமே கருக்கலைப்பு செய்யலாம் அல்லாது போனால் 3 ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய எவ்வகை சிறையொறுப்பும் வழங்கலாம். அப்பெண் உயிர்ப்புடன் துடிக்கும் கருவினை உடையவராக இருந்தால் ஏழு ஆண்டு சிறைத் தண்டனையுடன் குற்றக் காசிறுப்புக்கும் ஆளாதல் வேண்டும் என சொல்லப்பட் டுள்ளது. (PCTE -சரத்து-215)

சகல பெண்களும் விரும்பித்தான் கருவுறுகின்றனர் என்று கொள்ளவும் முடியாது. பாலியல் வல்லுறவுக்கூடாகவும், அவள் கருவைத் தாங்க நேரிடக்கூடும்;. (அது குடும்பத்தில் கனவனால் மேற்கொள்ளப்படும் பாலியல் வல்லுறவாகவும் இருக்கலாம்.) உற்ற கருவை கலைக்க முடியாமலும் போயிருக்கலாம். பாலியல் வல்லுறவு, அடிப்படையாக அமைந்தால் கருக்க லைப்பு செய்வதில் தவறில்லை என அதே சரத்தில் "புறநடை விலக்கு" எனும் பகுதியில் கூறப்பட்டிருக்கிறது. என்ற போதும் 'புறநடை விலக்கு" (2) இல் கருக்கலைப்பு செய்வதானால் ஆணினதும் 'இசைவு" தேவை என கூறப்பட்டுள்ளது.

கருவை சுமக்கும் பெண்ணிடம்தான் கருவை சுமக்கும் சம்மதம் பற்றிக் கேட்டறிய வேண்டுமேயொழிய கனவ னது இசைவை அங்கு வலியுறுத்துவது பாரதூரமானது. பெண் விரும்பாத போதும் ஆணின் நிர்ப்பந்தத்தால் இப்படி நடப்பதுவுமுண்டு. அதாவது கருவை சுமப்பவள், தான் விரும்பாத போதும் ஆணின் கட்டாய ஆணையின் பேரில் அதனை சுமக்க வேண்டும் என இதன் மூலம் மறைமுகமாக நிர்ப்பந்திக் கப்படுகிறது. அது மட்டுமன்றி ஆணாதி க்க திணிப்புச் சூழலும் பெண்ணடிமை கருத்தியற் சமூக அமைப்பும் இன்று "பாலியல் வல்லுறவு" என்பதை புறநிலையிலேயே கொள்கிறது. மனைவி விரும்பாத போதும் கனவனால் கட்டாய பாலியல் உறவுக்கு உள்ளாகும் வழமையான இயல்பு நிலையை பாலியல் வல்லுறவாக கொள்ளும் நிலை பல நாட்டு சட்டங்களில் இல்லை. எனவே இப்படியான சூழ்நிலையில் கருவை சுமத்தல் அல்லது கலைத்தல் தொடர்பான உரிமைகளை பெண்ணி டமே விட்டுவிட வேண்டும்.

கருக்கலைப்பு விடயத்தில் சில வேளை புலிகள் இயக்கத்தினர் தங்களது போர்க்கால மனித வள திரட்டலுக்கான (நீண்ட கால நோக் கைக் கொண்ட) - தந்திரோபாயமாக இதனைக் கொண்டிருக்கக் கூடும். என்ற போதும் போராட்டத்திற்கான பயன்படு த்தலுக்கு மாத்திரம் பெண்களைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களது உரிமைகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயம் பரவுவதற்கும் இது வழிவகுக்கிறது.


மறுமணம்

"மறுமணம்" விடயத்தில் அது இப்படிக் கூறுகிறது. ''துணைவனோ, துணைவியோ உயிருடன் இருக்கும் போது அல்லது விவாகரத்து நடவாதிருக்கும் போது அவர்களில் எவரும் மறுமணம் செய்யக்கூடாதெ ன்றும் செய்தால் ஏழு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்க வேண்டும். (PCTE-சரத்து 273) எனக் கூறப்பட்டிருக்கிற போதும் அதன் 'புறநடை" பகுதியில் திருமணமான எவரும் துணைவியைப் பற்றியோ துணைவ னைப் பற்றியோ தகவல் எதுவுமில்லா மலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டுமென நிர்ப்பந்திக்கிறது.

திருமணமான எவரும் துணைவி யைப் பற்றியோ துணைவனைப் பற்றி யோ தகவல் எதுவுமில்லாமலிருப்பின் 5 வருடங்கள் காத்திருத்தல் வேண்டு மென நிர்ப்பந்திக்கிறது.

திருமண கட்டமைப்பு என்பதே அது ஆண், பெண் ஆகிய இரு சாராரினதும் சகல சுதந்திரங்களையும் கட்டுப்ப டுத்தும் நிறுவனம் என்பது அறிந்ததே. பெரும்பாலும் திருமண கட்டமைப்பி னால் ஆணைவிட பெண், அதிக பாதிப் புக்குள்ளாகிறாள் என்பது இன்னொரு விடயம். இந்நிலையில் மேலே குறிப்பிட் டுள்ள 'காத்திருக்கும் வரையறை" என்பது அத்தியாவசியமானதென கருதமுடியாது.


பாலியல் வல்லுறவு

பாலியல் வல்லுறவு குறித்து பல விடயங்களை நல்ல முறையில் அணுகியிருக்கிற போதும் ஆங்காங்கு சில பலவீனங்களைக் காண முடிகிறது.

"பாலியல் வல்லுறவு குற்றம்" புரிந்த ஒருவருக்கு மரண தண்டனையோ அல்லது 14 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையுடன் கூடிய குற்றக்கா சிறுப்போ விதிக்கப்படுமென கூறுகிறது. (PCTE -சரத்து-279-(அ)) குற்றம் புரிந்தவர் 24 வயதையடையாதவராக இருப்பின் தண்டனையைக் குறைக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது, என்ற போதும் 'பாலியல் வல்லுறவு" பற்றிய குற்ற வழக்கானது, அத்தவறு இழைக்கப்பட்டதிலிருந்து 3 மாதங்களுக்குப் பின் தொடரப்படலாகாது எனக் கூறப்பட்டு ள்ளது. (PCTE -சரத்து-283-(4)) சில நிர்ப்பந்தங்கள் காரணமாகவோ அல்லது வேறு காரணங்களாலோ முதல் மூன்று மாதங்களுக்குள் வழக்கு தொடர முடியாமல் போனவர்களுக்கு நீதித்துறை நீதி வழங்க முடியாது என கூறுவது சரியான ஒன்றல்ல.

இச்சட்டத்தில் "பாலியல் வல்லுறவு", "பாலியல் வன்முறை" இரண்டுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் காட்டப்பட்டி ருக்கிறது. அந்த வரையறை இதுவரை வேறு யாரும் செய்யாத ஒன்று என்ற ரீதியில் தமிழீழ ஒறுப்புச் சட்டத்திற்கு பெருமையுண்டு. உதாரணத்திற்கு,

''ஆண் குறியை சிறிதளவு பெண்குறியினுள் நுழைத்தாலும் "பாலியல் வல்லுறவு"' நடைபெற்றதாகக் கொள்ளப்படும்" என்றிருக்கிறது.

''பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக அவளது பாலியல் உறுப்புக்களில் பாலியல் உணர்வுடன் அல்லது அவரை இழிவு படுத்தும் நோக்குடன் தீண்டுவது "பாலியல் வன்முறை"த் தவறாகும்" என்றும் கூறப்பட்டுள்ளது.

என்றாலும் இது தொடர்பாக ஒறுப்புச் சட்டத்திலுள்ள பலவீனமென்ன வென்றால் மேற்படி வரையறையிலிருந்து "பாலியல் வல்லுறவு" மற்றும் பாலியல் வன்முறை" ஆகியன ஆணொ ருவன் ஆண் மீது அல்லது பெண் பெண் மீது பிரயோகிக்கப்படும் 'பாலியல் வல்லுறவு"களையும் பாலியல் வன்முறைகளையும் கண்டும் காணாது விடுவதா என்ற கேள்வி எழுகின்றது. மேலும் இன்று குடும்பங்களில் கணவ னால் மேற்கொள்ளப்படுகின்ற பலாத்கார பாலியல் உறவுகளையும் இங்கு கவனத்தில் எடுக்க வேண்டியது அவசியம். சமூக யதார்த்த நிலையில் பெண், ஆண்மீது பாலியல் பலாத்காரம் பண்ணுமளவு நிலைமை இல்லை என்பதை நாமறிவோம். சில வேளை இது மிக அபூர்வமாகவே இடம் பெறும். ஆனால் ஆண், ஆண் மீது இக்குற்ற த்தை இழைப்பது இன்று சாதாரணமாகி வருவதை நடைமுறையில் அறிய முடிகிறது.

இதை விட "பாலியல் வல்லுறவு" (Rape) மற்றும் "பாலியல் வன்முறை" (Secual Violation) என்பதைப் போலவே 'பாலியல் தொந்தரவுகள்" (Sexual Disturbances) என்ற ஒன்றை வேறுபடுத்தி பார்க்க வேண்டிய அவசியமும் உள்ளது. குறிப்பாக பாலியல் வக்கிர நோக்கில் தீண்டுவது, இழி சொற்களைப் பயன்படுத்துவது, மற்றும் தொடர்பு சாதனங்கள், கலை வடிவங்களுக்கூடாக பாலியல் ரீதியிலான இழிவுகளைப் பிரதிபலிக்கச் செய்தல். அசிங்கப்படுத்திக் காட்டுதல் என்பவற்றை வேறு படுத்தி இனங்காண வேண்டியதும் அவசியமானதாகும். இவ்வகையில் பாலியல் துஷ்பிரயோக நடவடிக்கைகளை வேறுபடுத்தி இனங்காண்பது நீண்ட நோக்கில் நன்மைகள் பயக்கும். குறிப்பாக இது தொடர்பான தண்டனையளித்தலின் போதும் வேறுபடுத்தி பரிசீலிப்பதற்கு இது மிகவும் துணைபுரியும். எதிர்காலத்தில் இப்பாகுபடுத்தல் மேலும் விரிவடையலாம்.

இச்சட்டத்திலேயே முதற் தடவை யாக "பாலியல் வல்லுறவு" எனும் பதம் தமிழில் பாவிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப த்தில் தமிழில் 'கற்பழிப்பு" எனும் பதம் பயன்படுத்தப்பட்டபோது பெண்களுக்கு மட்டுமே கற்பின் தத்துவத்தை வலியுறு த்துவதாக அப்பதம் அமைந்திருந்ததாலும் பொருத்தமில்லாத சொல்லாக இருந்ததாலும் புதிய மாற்றுப் பதம் ஆக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக பெண்ணிலைவாதிகளால் கருத்தாடப்பட்டதைத் தொடர்ந்து "பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இப்பதத்தை அறிமுகம் செய்ததில் "சரிநிகர்" பத்திரிகைக்கு மிகுந்த பங்குண்டு. ஆனாலும் 'பாலியல் பலாத்காரம்" மற்றும் "பாலியல் வன்முறை" ஆகிய பதங்களில் "பாலியலுறவு" என்பது உள்ளடக்கப்படவில்லை என பல பெண்ணிலைவாதிகளால் பேசப்பட்டது. இந்நிலையில் தமிழீழ ஒறுப்புச்சட்டம் அறிமுகப்படுத்தியிருக்கிற "பாலியல் வல்லுறவு" எனும் பதத்தில் பாலியல் (Sexual) + வன்மை (violence) + உறவு (intercource) ஆகிய மூன்று விடயமும் உள்ளார்ந்திருப்பதால் இப்பதமே பொருத்தமானது என்பதைப் பலர் ஏற்றுக் கொள்கின்றனர். சில வேளைகளில் இதை விட நல்ல பதம் எதிர் காலத்தில் கண்டுபிடிக்கப்படலாம்.


இயற்கைக்கு முரணான பாலியல் உறவு

எவரேனும் ஆணுடன் அல்லது பெண்ணுடன் அல்லது ஏதேனும் விலங்குடன் இயற்கை இயல்புகளுக்கு முரணாக உடலுறவு கொள்ளும் எவரும் 10 ஆண்டுகள் வரை இருவகையிலொருவகை சிறைத் தண்டனையுடன் குற்றக்காசிறுப்புக்ளும் உள்ளாதல் வேண்டும் என கூறுகிறது. (PCTE -சரத்து-(286))

இதில் 'இயற்கை இயல்புக்கு முரண்" என எதனை வறையறுத்திருக்கின்றனர் என்பதை குறிப்பிடாதது குழப்பத்தை ஏற்படுத்துகிறது.

இன்று பெண்களது விடுதலைக்கு தடையாக இருக்கும் முக்கிய ஒரு பிரச்சினையாக பாலியல் சுரண்டல் பாலியல் உறவுக் கட்டுப்பாடு என்பன காணப்படுகிறது. இந்நிலையில் மேற்குலக நாடுகளில் பெண்களின் பாலியல் தேவை பாலியல் சுரண்டலிலிருந்து விடுதலையடைதல் என்பன அங்கு புதிதாக விஞ்ஞான ரீதியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயற்கை பாலியல் புணர்வு முறைகள் அறிமுகமானதிலிருந்து சில வளர்ச்சிகளையும் ஏற்படுத்தியிருக்கிறது. மரபு ரீதியிலான கருத்தியல் கட்டுப்பாடு நிலவும் நாடுகளுக்கு இவை வழக்கத்துக்கு வர சில காலமெடுக்கக் கூடும். எனவே இயற்கைக்கு மாறாக உறவு கொள்தல் கூடாது என கூறுவது பெண்களது மட்டுமல்ல ஆண்களி னதும் சுதந்திர இயல்புகளினதும் மீதான மோசகரமான கட்டுப்பாட்டு திணிப்பாகும்.

பரத்தமை

'பரத்தமை" (பாலியல் தொழில்) பற்றி இன்னமும் நமது சமூகத்தில் நிலைபெற்றிருக்கிற கருத்தியல் காரணமாக பரத்தமையை குற்றத்திற்குரிய ஒன்றாகவே காண்கிறதே ஒழிய அதற்கான ஒட்டு மொத்தமான சமூக நிர்ப்பந்தத்தை இனங் காண்பதில் தவறிழைத்தே வருகிறது.


பரத்தமையில் ஒரு பெண் ஈடுபடுவதற்குக் காரணமாக பெண்ணின் பாலியல் மேலுணர்வை கொள்ள முடியாது. அதற்கான சமூகச் சூழலே பரத்தமை நிலையினை அடையக் காரணமாக இருக்கிறது. எனவே, அந்தச் சூழல் மாற்றியக்கப்படாதவரை இவற்றிற்கான தீர்வுமில்லை.

''காசு நோக்கத்திற்காக ஒரு பாலார் மறுபாலாருடன் உடலுறவு கொள்ளுதல் 'பரத்தமை" தவறாகும். இத்தவறுக்கு நான்கு ஆண்டுகள் வரை நீடிக்கக்கூடிய இருவகையிலொருவகை சிறையொறுப்பு வழங்கப் படுதல் வேண்டும்." (PCTE -சரத்து (481),(420))

பரத்தமை விடயத்தில் எப்போதும் பெண்ணே தண்டிக்கப்பட்டு வரும் இயல்பை நாம் காணலாம்.

''பணம் கொடுத்து பாலியல் புணர்ச்சிக்கு அழைப்பதற்கு ஆண்கள் தயாராக இருக்கும் போது பெண் மட்டும் ஏன் தண்டிக்கப்படுகிறாள்?" என வினவுகிறார் பெண்ணிலைவாதிகளில் ஒருவரான சுனிலா அபேசேகர.

இக்கேள்வியின் நியாயத்தன்மை சரியானதே. லஞ்சக் குற்றச்சாட்டின் போதெல்லாம் லஞ்சம் வாங்கியவரை மட்டுமல்லாது லஞ்சம் வழங்கிய வரையும் தண்டிக்கும் இந்த சட்டங்கள் பரத்தமை விடயத்தில் மாத்திரம் பரத்தமையை தூண்டும் ஆண்களைத் தப்ப விட்டுவிட்டு பெண்களை மட்டும் தண்டிப்பது மிக மோசமான நடைமுறை.

மேலும் 'விபச்சாரி" அல்லது 'வேசி" என்று இறுதியில்தூற்றப்படும் செய்கை கூட பெண்களுக்கு எதிராக மாத்திரமே பாவிக்கப்படுகிறது. இவ்வகையான பதப் பிரயோகம் கூட ஆண் மேலாதிக்க த்தை வெளிப்படுத்தும் பதப் பிரயோ கமே. அப்பதங்களை பெண்கள் மீது மட்டுமே பிரயோகிக்க ஆணாதிக்கம் முயல்கிறது.

ஆண்கள் பல பெண்களுடன் பாலியலுறவில் ஈடுபட்டால் அவனை ''விபச்சாரன்" அல்லது ''பரத்தன்" போன்ற பதங்களைப் பாவிப்பதற்கான தமிழ்ச் சொல் வழக்காடல் இன்னமும் இல்லை. பெண்ணே தொடர்ந்தும் அவதூறுக்கும், அவமானத்துக்கும் உள்ளாகிறாள்.

இப்படி ''தமிழீழ ஒறுப்புச் சட்டம்" தயாரிக்கப்படும் போது பெண்கள் தொடர்பான விடயங்களில் பிற்போக்கான பார்வையைக் கொண்டிருப்பதாகவோ, ஆழமான தூரநோக்குடையதாகக் இருப்பதாகவோ கொள்ளமுடியாது.

ஒறுப்புச் சட்டத்தில் இதுவரை காணாத பல புதிய நல்ல கருத்துக்களுடன் கூடிய சட்டமியற்றல் நடைபெற்றிருக்கிற போதும் சிற்சில பலவீனங்களை உள்ளடக்கியிருப்பதை உணராது விட முடியாது. அதிலுள்ள "பெண்கள்" பற்றிய சிறு மதிப்பீடு மட்டுமே இதில் அடங்கியிருக்கிறது.

முழுமையாக அவை விமர்சனத்துக்கும் திருத்தங்களுக்கும் உள்ளாக வேண்டியதன் அவசியத்தை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வார்களாயின் ஆரோக்கியமான நகர்வுக்கு அவை சிறிதளவாவது வழி சமைக்கும்.

(1996 - ஏப்ரல் 20 சரிநிகர்)


...மேலும்

Oct 1, 2017

வித்தியாவிற்குக் கிடைத்த நீதியும், இசைப்பிரியாவிற்குக் கிடைக்காத நீதியும் - நிலாந்தன்


வித்தியாவிற்குக் கிடைத்த நீதி பரவலாக வரவேற்பைப் பெற்றிருக்கிறது. 29 மாதங்களின் பின் வழங்கப்பட்ட தீர்ப்பின் மீது மேன்முறையீடு செய்யப் போவதாகக் குற்றவாளிகளின் சட்டத்தரணிகள் கூறியிருக்கிறார்கள். ஆயுத மோதல்கள் முடிவிற்கு வந்தபின்னரான ஒரு காலச்சூழலில் குறிப்பாக ஐ.நாவின் வார்த்தைகளில் சொன்னால் நிலைமாறுகால நீதிச் சூழலில் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை சாதாரண தமிழ்ப் பொதுமக்கள் பாராட்டும் விதத்தில் தீர்ப்பு அமைந்திருக்கிறது. தமிழ் ஊடகங்களிலும், இணையப்பரப்பிலும் இத்தீர்ப்பு சிலாகித்து எழுதப்படுகிறது. வித்தியாவின் தாய்க்கு வழங்கிய வாக்குறுதியை அரசுத்தலைவர் ஒப்பீட்டளவில் குறுகிய காலத்துள் நிறைவேற்றியிருப்பதாக பாராட்டும் கிடைத்திருக்கிறது.

சில வாரங்களுக்கு முன் ஐந்து நாள் விஜயமாக இலங்கைக்கு வந்த ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமேர்சன் அப்போதிருந்த நீதியமைச்சரைச் சந்தித்த போது கடுமையாக முரண்பட்டிருந்தார். சந்திப்பை இடைநடுவில் முறித்துக்கொண்டு வெளியேறினார். அதன் பின் அவர் வெளியிட்ட அறிக்கையில் சட்டமா அதிபரைப் பின்வருமாறு கடுமையாக விமர்சித்திருந்தார். “நீதித்துறையின் கரங்களை சட்டமா அதிபர் கட்டி வைத்திருக்கிறார். இது ஜனநாயக நீதித்துறையின் அடிப்படைத் தத்துவம் மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு முற்றிலும் முரணானது. எந்தவொரு பிணை மனுவையும் நிராகரிக்கும் அதிகாரம் பெற்றவராக சட்டமா அதிபர் இருக்கிறார். இந்த நடைமுறை இன்னமும் சிறிலங்காவில் உள்ளது.”இவ்வாறான அனைத்துலக மட்டத்திலான விமர்சனங்களின் பின்னணியிலேயே மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

2015ம் ஆண்டு ஜெனீவாத் தீர்மானத்தின் போது அரசாங்கம் 25 பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டது. அவை யாவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கு அவசியமானவை என்று கருதப்படுகிறது. அவற்றுள் ஒரு பொறுப்பு “சட்ட ஆட்சியை நிலை நிறுத்தல் மற்றும் நீதி முறைகளில் நம்பிக்கையைக் கட்டி எழுப்புதல” என்று கூறுகின்றது. மேற்படி வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு மேலும் இரண்டு வருடகால அவகாசம் இவ்வாண்டு ஜெனீவாவில் வழங்கப்பட்டிருக்கிறது. இக்கால அவகாசத்தின் பின்னணிக்குள்தான் மேற்படித் தீர்ப்பு வந்திருக்கிறது.

இதை ரணில் மைத்திரி அரசாங்கம் தனது அடைவுகளில் ஒன்றாகக் காட்டக்கூடும்;. தமிழ் மக்கள் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் மீது நம்பத்தக்க விதத்தில் அக்கட்டமைப்பானது மறுசீரமைக்கப்படுகிறது என்ற ஒரு தோற்றத்தை இது உருவாக்கும். ஏற்கெனவே கடந்த மார்ச்மாத ஜெனிவாக் கூட்டத்தொடரிற்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்க அதைக் கூறிவிட்டார். “கலப்பு நீதிப் பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் என்பது மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தில் உட்சேர்க்கப்பட்ட போது சிறிலங்காவின் நீதிச் சேவை மீது அனைத்துலக சமூகம் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளில் சிறிலங்கா அரசாங்கமானது நாட்டின் நீதிச்சேவையை சுயாதீனமானதாக ஆக்கியுள்ளது. ஆகவே கலப்பு நீதிமன்றம் என்கின்ற கோரிக்கை தற்போது தேவையற்றதாகும்”

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரும் ஆட்சி மாற்றத்தின் பின் நீதிபரிபாலனக் கட்டமைப்பில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறியிருக்கிறார். கடந்த ஆண்டு மன்னாரில் இடம்பெற்ற ஒரு கலந்துரையாடலின் போது முன்னரைப் போல இப்பொழுது ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் நீதிமன்றத் தீர்ப்புக்களை மாற்றிவிட முடியாது என்று அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இத்தகையதோர் பின்னணிக்குள் வித்தியாவிற்கு வழங்கப்பட்டிருக்கும் நீதியானது இலங்கைத்தீவின் உள்நாட்டு நீதியின் அந்தஸ்தை உள்நாட்டளவிலும், உலக அரங்கிலும் உயர்த்துவதற்கு உதவக்கூடும். ஆனால் இங்கு பிரச்சினை என்னவென்றால் இந்த நீதியின் வீச்செல்லை எதுவரை விரிந்து செல்லும்? என்பதே. ஏனெனில் வித்தியாவிற்கு 29 மாதங்களில் நீதி கிடைத்துவிட்டது. ஆனால், இசைப்பிரியாவிற்கும், அவரைப் போன்று போர்க்களத்தில் குதறி எறியப்பட்ட பெண்களுக்கும் எட்டு ஆண்டுகள் கழிந்த பின்னரும் நீதி கிடைக்கவில்லை.

இசைப்பிரியா என்பது இங்கு ஒரு குறியீடுதான். அவரைப்போல இறுதிக்கட்டப் போரின் போதும் அதற்கு முன்பும் கைது செய்யப்பட்டபின் அல்லது சரணடைந்தபின் குதறி எறியப்பட்ட எல்லாப் பெண்களுக்கும் இசைப்பிரியா ஒரு குறியீடாகிறார். அவர் ஒரு இயக்கப் போராளி. அவர் கைது செய்யப்பட்ட பின் அல்லது சரணடைந்த பின் ஒரு போர்க் கைதியாகவே நடத்தப்பட்டிருந்திருக்க வேண்டும். போர்க் கைதிகளுக்குரிய சட்ட ஏற்பாடுகளுக்கமைய அவர் விசாரிக்கப்பட்டிருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த விசாரணைகளும் நடந்திருப்பதாகத் தெரியவில்லை. கிடைக்கப் பெறும் ஒளிப்படங்கள், கானொளிகள் என்பவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது ஒரு நவீன யுத்தத்தில் கைது செய்யப்பட்ட அல்லது சரணடைந்த போர்க்கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய பாதுகாப்போ, கௌரவமோ அவருக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை என்றே தெரிகிறது. பண்டைய நாகரிகமடையாத காலங்களுக்குரிய யுத்தகளங்களின் போது தோற்கடிக்கப்பட்ட தரப்பின் பெண்கள் எப்படியெல்லாம் வேட்டையாடப்படுவார்களோ அப்படித்தான் அவரும் அவரைப் போன்ற பெண்களும் விலங்குகளைப் போல வேட்டையாடப்பட்டிருக்கலாம் என்று கருதத்தக்க விதத்தில்தான் அக்காட்சிகள் அமைந்திருக்கின்றன. யுத்த களங்களில்; கைதிகளையும் சரணடைந்தவர்களையும் அவ்வாறு அவமதிப்பதற்கு பூமியில் உள்ள எந்தவொரு எழுதப்பட்ட சட்டமும் அனுமதிப்பதில்லை.

அக்காட்சிகளைப் படம் பிடித்தது தமிழ்த்தரப்பு அல்ல. அல்லது கடைசிக்கட்ட யுத்தத்தின் போது கள்ள மௌனம் சாதித்த சக்தி மிக்க நாடுகளின் செய்மதிக் கமராக்களுமல்ல. மாறாக போரில் வெற்றி கொண்ட தரப்பே தனது கைபேசிக் கமராக்களின் மூலமும், ஏனைய கமராக்களின் மூலமும் அப்படங்களை எடுத்திருக்கிறது. வெற்றிக்களிப்பில் நிதானமிழந்து தமது வெற்றிக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபிகளே இப்பொழுது அவர்களுக்கு எதிரான சாட்சியங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

அவ்வொளிப்படங்களிலும், கானொளிகளிலும் காணப்படும் பெண்களைப் பற்றியே இக்கட்டுரையில் எழுதப்படுகிறது. அவர்களில் அநேகமானவர்கள் ஆடைகளின்றிக் கிடக்கிறார்கள்.குருதி வடிந்து காய்ந்த முகங்கள். அவர்களுடைய அவயவங்கள் குதறப்பட்டுள்ளன அல்லது சிதைக்கப்பட்டுள்ளன. கொல்லப்பட்ட பின்னரும் அவர்களை ஆடைகளின்றி வரிசையாக அடுக்கி படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. மிருகங்களின் உடல்களைத் தூக்கி எறிவது போல அவர்களுடைய நிர்வாண உடல்கள் வாகனங்களில் ஏறியப்படுகின்றன.

அவர்களில் ஒரு பகுதியினர் அவர்களுடைய அரசியல் நம்பிக்கைகளுக்காக ஆயுதமேந்தியவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் ஒரு யுத்தகளத்தில் சரணடைந்த பின் அல்லது கைது செய்யப்பட்ட பின் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு மனித நாகரீகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட உலகளாவிய சட்ட ஏற்பாடுகள் உண்டு. ஆனால் அந்த சட்ட ஏற்பாடுகள் அனைத்திற்கும் முரணாகவே அவர்கள் நடாத்தப்பட்டிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் நடாத்தப்பட்டதற்கு எதிராக யாரிடம் நீதி கேட்பது? வித்தியாவிற்கு வழங்கப்பட்டதைப் போல அவர்களுக்கும் நீதி வழங்கப்படுமா? நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் கீழ் அவர்களுக்கு நீதி வழங்கப்படுமா?

ஆனால் அரசாங்கத்தை ஆதரிக்கும் லிபரல் ஜனநாயக வாதிகளான ஜெகான் பெரேரா போன்றவர்களே பின்வருமாறு எழுதுகிறார்கள். “போர்க்குற்றங்களை மையமாகக்கொண்ட நிலைமாறுகால நீதிச் செய்முறை முன்னோக்கி நகரப் போவதில்லை என்பது இப்போது தெளிவாக விளங்கிக் கொள்ளப்படவேண்டும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு சர்வதேச விசாரணை மன்றம் அல்லது கலப்பு முறையிலான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நிலைமாறுகால நீதிக்கு எதிரானவர்களின் கரங்களையே பலப்படுத்துகிறது. சர்வதேச சமூகம் மற்றும் தமிழ் அரசியல் சமூகம் என்பவற்றின் சில பிரிவினரால் வலியுறுத்தப்படுவது போன்று நிலைமாறுகால நீதியின் மைய விவகாரமாக போர்க்குற்ற விசாரணையைக் கருதினால் நிலைமாறுகால நீதிக்கு மக்களின் ஆதரவைப் பெறுவதென்பது மேலும் சிரமமானதாகிவிடும்”.

அதாவது நிலைமாறுகால நீதிப் பொறிமுறைக்குள் குற்றவிசாரணை என்ற பகுதியை நீக்கிவிடவே அரசாங்கம் முயன்று வருகிறது. உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றுக்கூடாகவே அந்த விசாரணைகளைச் செய்யலாம் என்று உலக சமூகத்தை நம்ப வைக்க முயற்சிக்கிறது. வித்தியாவிற்கு வழங்கப்பட்ட நீதியானது நீதிபரிபாலனக் கட்டமைப்பின் நம்பகத்தன்மையை உயர்த்த உதவும். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளில் ஒருவர் ஏற்கெனவே கிருசாந்தி வழக்கிலும், விஸ்வமடு வழக்கிலும் துணிச்சலான தீர்ப்புக்களை வழங்கியிருக்கிறார். ஆனால் இது போன்ற தீர்ப்புக்களை சில நீதிபதிகளின் தனிப்பட்ட அறமாகவே பார்க்க வேண்டும். அவர்கள் சார்ந்த ஒரு கட்டமைப்பின் கொள்கை முடிவாக பார்க்க முடியாது. ஏனெனில் குமரபுரம் படுகொலை வழக்கில் தீர்ப்பு எப்படி அமைந்தது என்பதனை இங்கு சுட்டிக்காட்டலாம். அதாவது சில நீதிபதிகளின் தனிப்பட்ட நீதியை ஒரு கட்டமைப்பின் நீதியாகக் கருத முடியாது.

ஆட்சி மாற்றத்தின் பின் ரணில் – மைத்திரி அரசாங்கம் குறிப்பிட்ட சில வழக்குகளை வேகப்படுத்தி தீர்ப்புக்களை வழங்கி வருகிறது. இதில் பெரும் பகுதி வழக்குகள் ராஜபக்க்ஷ அணிக்கு எதிரானவை. அவை கூட போர்க்குற்றம் சம்பந்தப்பட்டவை அல்ல. பதிலாக அதிகார துஸ்பிரயோகம், ஊழல் போன்றவற்றோடு தொடர்புடையவை. அதே சமயம் சில பிரமுகர்களின் படுகொலை வழக்குகளும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றிலும் கூட ராஜபக்க்ஷ அணியோடு நெருங்கிச் செயற்பட்ட தமிழ் மற்றும் சிங்களத் தரப்புக்களே தண்டிக்கப்பட்டுள்ளன. எனவே ஆட்சி மாற்றத்தின் பின் வழங்கப்பட்ட தீர்ப்புக்களில் பெரும்பாலானவை சிங்கள பௌத்த கூட்டு உளவியலை அச்சுறுத்தாத தீர்ப்புக்களே.

ஆனால் போர்க்குற்ற விசாரணைகள் அப்படிப்பட்டவையல்ல. முழு நிறைவான விசாரணைகள் நடத்தப்படுமாக இருந்தால் சாட்சிகளுக்கு முழு நிறைவான பாதுகாப்பு வழங்கப்படுமாகவிருந்தால் நிலமை எப்படி அமையும்? இன்று தென்னிலங்கையில் வெற்றி நாயகர்களாகக் கொண்டாடப்படும் பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியிருக்கும். வெளிநாட்டுத் தூதுவர்களாக ராஜதந்திர அந்தஸ்து வழங்கப்பட்ட பலரும் குற்றவாளிக் கூண்டில் ஏறவேண்டியிருக்கும். அவ்வாறான விசாரணைகளின் முடிவில் வழங்கப்படும் தீர்ப்புக்கள் நிச்சயமாக சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பீதிக்குள்ளாக்கக் கூடியவை என்பதனால்தான் அரசுத் தலைவர் சிறிசேன படைத்தரப்பைச் சேர்ந்த யாரையுமே தான் காட்டிக் கொடுக்கப் போவதில்லை என்று அண்மையில் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

எனவே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைப்பது என்று சொன்னால் இலங்கைத்தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் அடிச்சட்டமாக இருக்கும் சிங்கள பௌத்த கூட்டு மனோ நிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அரசறிவியலின் ஆரம்பப் பாடங்களின் படி ஒர் அரசை மூன்று அலகுகள் கட்டியெழுப்புகின்றன. முதலாவது சட்டவாக்க சபை. அதாவது மக்கள் பிரதிநிதிகளின் சபை. இரண்டாவது பாதுகாப்புக் கட்டமைப்பு, மூன்றாவது நீதிபரிபாலனக் கட்டமைப்பு. ஓர் அரசை உருவாக்கும் இவ் மூன்று மூலக்கூறுகளும் அவ்வரசின் கொள்கைகளைப் பாதுகாப்பவை. இலங்கைத் தீவின் அரசு எனப்படுவது அதன் இயல்பில் ஒரு சிங்கள பௌத்த அரசு. எனவே சிங்கள பௌத்த கூட்டு உளவியலை பாதுகாப்பதே அதன் நீதிபரிபாலனக் கட்டமைப்பின் பணியாகும். இப்படிப் பார்த்தால் அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படும் பொழுதே இசைப்பிரியாக்களுக்கு நீதி கிடைக்கும்.

அக்கூட்டு உளவியலில் மாற்றம் ஏற்படுவது என்றால் அது குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும். அக்குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு புத்த பகவானையே துணைக்கழைக்கலாம். சிங்கள பௌத்த பண்பாடு எனப்படுவது மூத்தோரை, பெரியோரை மதிக்கும் இயல்புடையது. அதிகாலையில் வீட்டிலுள்ள மூத்தவர்களை காலைத் தொட்டு வணங்கி விட்டு வேலைக்குச் செல்லும் ஒரு சமூகம் அது. அந்தச் சமூகத்திலிருந்து வந்த ஒரு பகுதியினர் தான் இசைப்பிரியாக்களை குதறியபின் ஆடைகளின்றி வன்னி கிழக்குத் தரவைகளில் வீசியெறிந்தார்கள். பின்னர் அதைப் படமும் எடுத்தார்கள். அந்தப் படங்களை அவர்கள் யாருக்கு காட்டுவதற்காக எடுத்தார்கள்? அதை அவர்கள் தங்களுடைய மனைவிமார்களுக்கோ, காதலியர்களுக்கோ சகோதரிகளிற்கோ இதுதான் எமது வீரம் என்று கூறிக் காட்ட முடியுமா? காலையில் காலைத் தொட்டு வணங்கிய தாய்க்கும், தந்தைக்கும், தாத்தாவிற்கும், பாட்டிக்கும் காட்ட முடியுமா? அப்படி யாருக்கும் காட்ட முடியாதென்றால் எதற்காக அந்தப் படங்களை எடுத்தார்கள்? பௌத்த தர்மத்தின் கர்மக் கோட்பாடு அவர்களை உந்தித்தள்ளியிருக்குமோ? கைபேசியால் காட்டிக்கொடுக்கப்பட்ட ஒரு நாடு.?

ஆனால் இது விடயத்தில் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியைத் தூண்டுவதற்கு தமிழ், சிங்கள அரசியல்வாதிகளும், செயற்பாட்டாளர்களும் போதியளவு உழைத்திருக்கவில்லை. ஆன்மீகவாதிகளும், மதப்பெரியார்களும் போதியளவு செயற்படவில்லை. புத்திஜீவிகளும், கருத்துருவாக்கிகளும், ஊடகவியலாளர்களும், படைப்பாளிகளும் போதியளவு செயற்படவில்லை. நிலைமாறுகால நீதியை காசு காய்க்கும் மரமாகக் கருதும் என்.ஜி.யோக்கள் அதைச் செய்யப் போவதில்லை. ஓர் அரசுடைய தரப்பின் குற்றங்களை அரச தரப்பாகிய தமிழ்த்தரப்பு இழைத்திருக்கக்கூடிய குற்றங்களோடு சமப்படுத்த விளையும் எவரும் அப்படி ஒரு குற்றவுணர்ச்சியைத் தூண்ட முடியாதவர்களும், தூண்டுவதில் ஆர்வமற்றவர்களும்தான்.

இசைப்பிரியாக்கள் குதறி எறியப்பட்ட ஒளிப்படங்கள் சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் குற்ற உணர்ச்சியை நொதிக்க வைப்பதற்கு மிகப் பொருத்தமானவை. சிங்கள பௌத்த பண்பாட்டை அவை எப்பொழுதும் குற்றவுணர்ச்சி கொள்ளச் செய்பவை. ஓஷோ கூறுவது போல குழுமனோநிலையில் இருந்து செய்யும் பொழுது சில செயல்கள் குற்றங்களாகத் தெரிவதில்லை. அதற்கு ஒரு கூட்டு நியாயம் கற்பிக்கப்படும். ஆனால் அதையே தனியே இருந்து சிந்திக்கும் போது மனச்சாட்சி வேலை செய்யத் தொடங்கும். குற்ற உணர்ச்சி மேலெழும்.திருமதி சந்திரிகாவின் மகன் சனல் நாலு வெளியிட்ட படத்தைப் பார்த்து விட்டு வெட்கப்பட்டதாகக் கூறப்படுவதை இங்கு சுட்டிக்காட்டலாம்.

இவ்வாறு ஒரு கூட்டுக் குற்றவுணர்ச்சியைத் தூண்டினால் மட்டுமே இலங்கைத் தீவின் நீதிபரிபாலனக் கட்டமைப்பை தலைகீழாக மாற்றலாம். அப்பொழுதுதான் இசைப்பிரியாக்களுக்கும், கோணேஸ்வரிகளுக்கும் உரிய நீதி கிடைக்கும். இனப்படுகொலைகளுக்கு எதிரான நீதியும் கிடைக்கும். அது மட்டுமல்ல. இனப்பிரச்சினைக்கான முழு நிறைவான ஒரு தீர்வைக் காண்பதற்கு அது இன்றியமையாத ஒரு முன் நிபந்தனையுமாகும்.

நன்றி - தினக்குரல்
...மேலும்

Sep 17, 2017

கருக்கலைப்பு: என் உடல்! என் தெரிவு! என் உரிமை!- என்.சரவணன்


“பெண்களுக்கு கர்ப்பப்பை இருப்பதால்தான், தாய்மை என்பதை வலியுறுத்தி, அவர்களை ஏமாற்ற, ஆண்களால் முடிகிறது. எனவே, பெண்களே உங்களின் கர்ப்பப்பைகளை தூக்கி எறியுங்கள்” என்று எச்சரித்தார் தந்தை பெரியார்.

கருக்கலைப்புக்கு அனுமதியளிக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த உத்தேச சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. இனி நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெறவேண்டியது தான் மிச்சம். கடந்த ஆட்சி காலங்களில் இதற்கான சட்டத்தைக் கொணர்வதற்கான முயற்சிகளை இழுத்தடித்து இறுதியில் பாராளுமன்றத்துக்கு கூட அதைக் கொண்டுவர விடவில்லை. அதே பாணியில் இம்முறையும் இதற்கான சட்டமூலம் இழுத்தடிக்கப்பட்டுவருகிறது.

இம்முறை இத்தகைய இழுத்தடிப்பு எதுவுமின்றி உடனடியாக சட்டமூலத்தை நிறைவேற்றவேண்டும் என்று பல பெண்ணுரிமை இயக்கங்கள் குரல் கொடுத்துவருவதுடன், ஏனைய ஜனாக சக்திகளின் ஆதரவையும் கோரியிருக்கிறது.

பாதுகாப்பான கருக்கலைப்புக்கான தடைகளை இலங்கை நீக்க வேண்டும் என்று ஐ.நா சபையின் பெண்களுக்கெதிரான அனைத்து வகையான பாரபட்சங்களையும் இல்லாது செய்தவற்கான சமவாயம் (CEDAW) மார்ச் மாதம் வெளியிட்டிருந்த அறிக்கையில் கோரியிருந்தது.

அதேவேளை இதுவும் முழுமையான அனுமதியல்ல. பாலியல் வன்முறையால் தரிக்கும் கர்ப்பம் மற்றும் மரபணு பிறழ்வுக்குள்ளான கருக்களை கலைப்பதற்கும் (அந்தத் தாயின் விருப்பத்தின் பேரில்) மாத்திரமே சட்ட ரீதியாக அனுமதியளிக்கும் வகையில் இச் சட்டம் கொண்டு வரப்படவுள்ளது. இந்த இரு காரணங்களைக் கூட இலங்கையின் மதத் தலைமைகளை எதிர்க்கத் தொடங்கியுள்ளன.

தற்செயலாக/திட்டமிடப்படாத நிலையில் கர்ப்பம் தரித்துவிடுதல் என்பது உலகில் சாதாரணமாக நிகழும் போக்கும். அடுத்தது தவறான பாலுறவின் காரணமாக, பாலியல் வல்லுறவின் காரணமாக, சிறுவர் துஷ்பிரயோங்கங்களின் காரணமாகவும் கருவுருதல் நிகழ்ந்துவிடுகிறது. அப்படியான சந்தர்ப்பங்களில் சட்டம் அதனை கலைக்க அனுமதி மறுப்பதால் மிக மோசமான விளைவுகளை சம்பந்தப்பட்ட பெண்களும், இந்த சமூகமும் எதிர்கொண்டு வந்திருக்கிறது.


கத்தோலிக்க பேராயர் சம்மேளனம் ஒக்ஸ்ட் 26 அன்று தாம் இதனை வன்மையாக எதிர்ப்பதாக அறிக்கைவெளியிட்டிருந்தது. கரு உருவானதிலிருந்து மனித உயிர் ஆரம்பித்துவிடுகிறதென்று கத்தோலிக்க சபை நம்புவதால் எவருக்கும் உயிரைப் பறிக்கும் உரிமை எவருக்கும் கிடையாதென்றும் அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தது.

அஸ்கிரி விகாரையின் தரப்பிலிருந்து வேதாகம தம்மானந்த ஹிமி வெளியிட்டிருந்த கருத்தில் தமது தரப்பிலும் கருக்கலைப்பு சட்டத்துக்கு எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.

தற்போது கத்தோலிக்க, பௌத்த, இஸ்லாமிய மதத் தலைமைகளே இந்த விடயத்தில் தமது எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன. கடந்த காலங்களைப் போல அரசு இந்த சக்திகளுக்கு அடிபணியாமல் கருக்கலைப்பு அனுமதிக்கான சட்டமூலத்தை பாராளுமன்றத்துக்கு கொண்டு வரவேண்டும். மக்கள் பிரதிநிதிகள் இதனை பொறுப்புடன் ஆதரிக்க வேண்டும். மதத் தலைவர்களுக்கு இதனை எதிர்க்க தமது மத நம்பிக்கைகள் பயன்படுமேயொழிய தமது பெண்களின் உடல், உள ரீதியிலான துன்பத்துக்கு தீர்வு சொல்ல முடியாது.

கருக்கலைப்பை சட்டமாக்கும் யோசனையானது கருவுற்ற பெண்களை இழுத்துப்பிடித்து கருவைக் கலைப்பதற்கான லைசன்ஸ் அல்ல. கருவைச் சுமக்கும் பெண் தனது அல்லது குழந்தையின் நலன் கருதி எடுக்க தனக்கு இருக்கும் உரிமை பற்றியதே பற்றியதே அது.


கருவைக் கலைப்பதற்காகவே நாடு முழுவதும் சட்டவிரோத கருக்கலைப்பு நிலையங்கள் இது வரை இயங்கி வந்துள்ளன. அது போல தொழில்முறை சாராதோரும் கூட இந்த கருக்கலைப்பில் ஈடுபடுவதால் பல பெண்கள் பாதிக்கப்பட்டும் இருக்கிறார்கள். இது சட்டவிரோதமாக்கப்பட்டிருப்பதால் சமூக அளவிலும் இதனை ஒரு குற்றச்செயலாகவே பார்க்கப்பட்டு வந்திருகிறது.

இலங்கையில் வருடாந்தம் நான்கு லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் கர்ப்பம் தரிக்கும் போது நாளாந்தம் ஏறத்தாள 658க்கும் மேற்பட்ட கருக்கலைப்பு இடம்பெறுவதாக அறியப்படுகிறது. அதாவது வருடாந்தம் கிட்டத்தட்ட 2,50,170 "சட்டவிரோத" கருக்கலைப்புகள் மேற்கொள்ளட்டுவருகின்றன. சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி கருக்கலைப்பு செய்து கொள்வோரில் ஏறத்தாள 24,000 பேர் குறைந்த வயதுடைய சிறுமிகள் என்றும் தெரிவித்துள்ளது. இவர்களில் அதிகமானோர் குருநாகல், தம்புள்ள போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் என்றும் அறியப்படுகிறது. பெண்களும் பணிபுரியத் தொடங்கிய பின்னர் அவர்களின் பெண் பிள்ளைகள் பாதுகாவலர்களால், அல்லது குடும்ப உறுப்பினர்களால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு ஆளாகின்ற போக்கு பற்றி நிறையவே பதிவாகியுள்ளது. குறிப்பாக தகப்பனால் அல்லது சகோதரர்களால் பாலியல் துஷ்பிரயகத்துக்கு உள்ளாகிவரும் பல செய்திகளை நாளாந்தம் நாம் கடந்து வருகிறோம். அப்படியான சந்தர்ப்பங்களில் கருக்கலைப்புத் தடை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு என்ன நன்மையை செய்துவிட முடியும். அப்பெண்ணுக்கு இரட்டிப்பு கொடுமையையே கருக்கலைப்பு தடை எற்படுத்த முடியும்.

குடும்ப சுகாதார செயலகத்தினால் 2012 வெளியிடப்பட்ட அறிக்கையின்படி இலங்கையில் மரணமுறும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கையில் 13% வீதமானோர் பாதுகாப்பற்ற கருக்கலைப்பினால் மரணமுறுபவர்கள் என்று தெரிவித்திருந்தது.

தாயொருவர் கர்ப்பம் தரித்து 20வது வாரத்தில் தான் சிசுவின் மரபணு பிறழ்வு பற்றி வைத்தியர்களினால் இனம் காண முடியும். பிறப்பு குறைபாடுடைய பிரசவத்தினால் தாய்மார்கள் பல்வேறு துன்பங்களை வாழ் நாள் முழுவதும் அனுபவிக்க வேண்டியேற்படுகிறது.

இந்த சட்டமானது பெண்களின் ஆரோக்கியத்தையும், சுகாதாரத்தையும் பலப்படுத்துமே ஒழிய அது அவர்களை பாதிக்காது. இலங்கையில் கருக்கலைப்புக்காக பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும், மோசமான முறைகளாலும் கர்ப்பமுறுவதை நிரந்தரமாக பாதிக்கச் செய்த சம்பவங்களும், பயன்படுத்தப்பட்ட கருவிகளால் வேறு நோய்களுக்கு ஆளாகிய சம்வங்களும் கூட இதற்கு முன்னர் பதிவாக்கியிருக்கின்றன. உள்ளே ஏற்பட்ட காயங்களால் புற்றுநோய்க்கான எச்சரிக்கையும் கூட செய்யப்பட்டிருக்கின்றன.

பாலியல் தவறுகளையும், துஷ்பிரயோகங்களையும், பாலியல் தொழிலையும் இது ஊக்குவிக்கும் என்கிற ஒரு வாதமும் இந்த சட்டத்துக்கு எதிரான வாதமாக முன்வைக்கப்படுகிறது. ஏதோ இந்த தடை இருப்பதால் தான் இவை அனைத்தும் நடக்காமல் பார்த்துக் கொள்ளப்படுகிறதா என்ன?


கிராமப் புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வந்து தங்கி தொழில் புரியும் பல பெண்கள் காதலின் பேரால் ஏமாற்றப்பட்டு கர்ப்பம்தரித்து அதனை களவாக கருக்ககலைப்பு செய்வதற்காக பிழையான சக்திகளிடம் போய் சிக்கி சீரழிந்த கதைகளை நாம் எத்தனையோ அறிந்திருக்கிறோம். பிழையான வழிகளில் கருக்கலைப்பு செய்துகொள்ளப்பட்டவேளை பெண்ணும் இறந்துபோன சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.

வசதிபடைத்தவர்கள் இந்தப் பிரச்சினைகளில் இருந்து மீள பல வாய்ப்பு வசதிகளை அளித்திருக்கிற இந்த சமூகத்தால் வசதியற்ற ஏழைப் பெண்களுக்கு கவலையையும், கண்ணீரையும், அவலத்தையும் தான் வழங்கியிருக்கிறது. இந்த புதிய சட்டம் இப்படி பிரச்சினைகளுக்கு உள்ளாகும் அபலைப் பெண்களுக்கு ஒரு புறமாவது ஆறுதலைத் தரும். கருக்கலைப்பு செய்ய முடியாமல் போன பெண்களுக்கு சமூகத்தால் ஆறுதல் கிட்டியதில்லை. பெரும் பிரச்சினையே சமூகத்தால் எதிர்கொள்ளும் பிரச்சினையே. உலகிலேயே தற்கொலைக்கு பேர் போன இலங்கையில் பெண்களின் தற்கொலைக்கு இதுவும் ஒரு காரணியாக இருந்து வருகிறது என்பதை சில அறிக்கைகளும் இதற்கு முன்னர் சுட்டிக் காட்டியிருக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஏற்கெனவே சமூக, மத, பண்பாட்டு, ஐதீகங்களும் ஆணாதிக்க அரசியல் காரணிகளும் இந்த விடயத்தில் தீர்மானகரமான தலையீட்டைச் செய்துவந்தன. சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் உரிமை மறுக்கப்பட்டிருந்து. தனது உடலின் மீதான முடிவுகள் தனக்கு வெளியில் தீர்மானிக்கப்படும் கொடூரமே நடைமுறையில் இருந்து வந்தது. கர்ப்பமடைதல், அதனை சுமத்தல், கர்ப்பகாலத்தில் பராமரித்தல், தாய்சேய் நலன்களை ஆரோக்கியமாகப் பேணுதல், கடும் வேதனையுடன் பிரசவித்து ஒப்படைத்தல் என்பதை தாயின் கடமையாகவும், பொறுப்பாகவுமே கொள்ளப்பட்டு வருகிறது.

தென்னாசியாவில் அபாகானிஸ்தானுக்கு அடுத்ததாக மோசமான ரயரைகளைக் கொண்டிருப்பது இலங்கை தான். பங்களாதேஷ், பாகிஸ்தான், மாலைதீவு போன்ற நாடுகள் கூட இலங்கையை விட இந்த விடயத்தில் நெகிழ்ச்சியான போக்கு கடைபிடிக்கப்படுகிறது. பூட்டானில் பெண்ணை காப்பதற்காக அல்லது பாலியல் வல்லுறவு போன்ற பின்னணியின் காரணமாக கருக்கலைப்பை அனுமதிக்கிறது. இந்தியாவில் சமூக பொருளாதார காரணிகளுக்காகக் கூட கருக்கலைப்பு செய்து கொள்ள முடியும். ஆனால் இலங்கை இந்த விடயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இல்லை.

பெண்களின் துன்பம் போக்க இந்த சட்டம் கொண்டுவரப்படவே வேண்டும். ஒரு ஜனநாயக நாட்டில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத்தை வைதீக சக்திகள் கட்டுப்படுத்துவதை அனுமதிக்கமுடியாது. நமது சனத்தொகையில் அதிகமானவர்கள் பெண்களாக இருந்தும் பெண்களின் முக்கிய பிரச்சினைகளில் பெண்களுக்கு பாதகமான முடிவுகள் எடுக்கப்படுவது துரதிஸ்டமே.

சந்திரிகா ஆட்சிகாலத்திலும் ஜீ.எல்.பீரிஸ் நீதியமைச்சராக இருந்த வேளை பெண்கள் அமைப்புகளின் நிப்பந்தத்தின் காரணமாக கருக்கலைப்பை சட்டபூர்வமாக்குவதற்கான கலந்துரையாடல்களும் பின்னர் அதற்கான மசோதாவும் உருவாக்கப்பட்டு வந்தது. ஆனால் மதத் தலைவர்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக அது இறுதியில் கிடப்பில் போடப்பட்டது.


பெண்களை கர்ப்பக் காவிகளாக இயற்கை விதித்திருந்தாலும் பெண்களை கலாசாராக காவிகளாகவும் ஆக்கியிருப்பது இந்த ஆணாதிக்க சமூகமே. கர்ப்பத்தையும் ஏற்படுத்தி தப்பி விடும் ஆணாதிக்க சமூகம் அக்கர்ப்பத்தை சுமந்து பெற்றே தீரவேண்டும் என்பதையும் பண்பாட்டின் பேராலும், ஐதீகங்களின் வழியாலும் பெண்களை நிப்பந்தித்திருக்கிறது இந்த சமூக அமைப்பு. கருக்கலைப்பு குறித்த இருவேறு நிலைப்பாடுகள் உலகம் முழுவதும் நீண்ட காலம் நிலவி வருவது தான்.

உலக அளவில் கருக்கலைப்புக்கு ஆதரவாக போராடும் பெண்களின் பிரசித்தமான சுலோகம் ‘என் உடல்! என் உரிமை” ('My body, My choice, My rights') என்பது. இலங்கையிலும் பெண்கள் அமைப்புகள் பல அந்த கோஷத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.

கருக்கலைப்பு என்பது ஒரு கலாசார விடயமாக அணுகப்படுவது போல “சிசுக்கொலை” என்கிற பாணியில் உணர்ச்சிபூர்வமான (Sentiment) விவகாரமாகவும் ஆக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இது நடைமுறை (Practical) விவகாரம். எதிர்கொள்பவர்கள் பெண்கள். இதுவரை காலம் பெரும்பான்மை ஆண்களால் ஆக்கப்பட்ட சட்டங்களே பெண்களின் சுய விருப்பையும், சுயப் பிரச்சினையும் தீர்மானித்தன.

மாற்றமடைந்துவரும் புதிய யுகத்தில் இதனை ஜனநாயக் ரீதியிலும், மனிதாபிமான அடிப்படையிலும், நடைமுறை யதார்த்ததிலிருந்துமே இந்த பிரச்சினை அணுகப்படவேண்டும். அந்த வகையில் பெண்களுக்கான நீதியையும், பாதுகாப்பையும் ஓரளவாவது உள்ளடக்கியிருக்கிற இந்த சட்டம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. இதை நிறைவேற்றுவதற்கான அழுத்தத்தை நாம் அனைவரும் கொடுக்கவேண்டும்.

நன்றி - தினக்குரல்


...மேலும்

Jul 25, 2017

அம்மா எப்படி அபசகுனமாவார்?என் சித்தப்பா மகன் திருமண வரவேற்புக்கு அம்மாவுடன் சென்றேன். மண்டபத்துக்குள் நுழைந்ததுமே மணமேடைதான் முதலில் கண்ணில்பட்டது. மணப்பெண், மெலிந்த தேகத்துடன் உலகத்தின் பாரங்கள் ஏறாத முகத்துடன் ரோஜா மாலையும் கழுத்துமாக பூரிப்புடன் அமர்ந்திருந்தாள். மாப்பிள்ளையோ முகமெல்லாம் பல்லாக ரோஜா மாலையுடன் வருவோர் போவோரிடமெல்லாம் கைகுலுக்கிக்கொண்டு பிஸியாக இருந்தான். 

எங்களைக் கண்டதும் ஒரு பெருங்கூட்டம் சூழ்ந்துகொண்டு ஆர்வத்துடன் நலம் விசாரித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அம்மாவுக்கு அதைவிட மகிழ்ச்சி. சொந்தங்களைப் பார்த்ததும் பழைய நினைவுகள் எல்லாம் கரை புரண்டு ஓடின.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் நான் அன்றுதான் பல உறவினர்களை முதன்முதலாகப் பார்த்தேன். நன்றாக எண்ணெய் தேய்த்த முடியை கையாலேயே வாரி கொண்டையாகப் போட்டு, மல்லிகை சூடி, மஞ்சள் முகங்களில் குங்குமப் பொட்டு வைத்து, பின்பக்கம் கொசுவம் வைத்த சேலை கட்டிச் சிரித்த முகத்துடன் சத்தமாக பேசியபடியே வளையவந்தனர் பெண்கள். பட்டு வேட்டி சட்டையுடனும் பளீர் சிரிப்புடனும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது ஆண்கள் கூட்டம். அந்த இடம் முழுக்க நகர்ப்புற வாசனை மறைந்து கிராமத்து மணம் வீசி மனதை ரொம்பவே கிறங்கடித்தது.

நான் இப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தபோதே எல்லோரையும் சாப்பிட அழைத்தார்கள். டைனிங் ஹாலில் மர பெஞ்சு, மர டேபிள் போட்டிருந்தார்கள். மண் தரை சாணம் தெளிக்கப்பட்டு ஈரமாக இருந்தது. கலர் பொடிகளால் பெரிதாகக் கோலம் போட்டிருந்தார்கள். ஆட்கள் அமர அமர கேட்டுக் கேட்டு இட்லி, இடியாப்பம், கேசரி, சப்பாத்தி, குருமா, சாம்பார், தேங்காய்ச் சட்னி, வடை என்று சத்தமாகப் பேசிக்கொண்டே வைத்தார்கள். பேச்சுச் சத்தம், மைக்கில் பேசும் சத்தம், பாட்டுச் சத்தம், பாத்திரங்கள் சத்தம் என அந்தப் பகுதியைச் சத்தம்தான் ஆண்டுகொண்டிருந்தது. ஆனால், கொஞ்சம்கூட எரிச்சல் தரவில்லை. காதுக்கு இனிமையாக இருந்தது.

எத்தனையோ உறவினர்களை அறிமுகப்படுத்திய சித்தப்பா, மணப்பெண்ணின் தாயை அறிமுகப்படுத்தவில்லை என்று அப்போதுதான் ஞாபகம் வந்தது. உடனே, “பானுவோட அம்மா எங்க சித்தப்பா? நான் இன்னும் அவுங்கள பார்க்கலை” என்ற என் கேள்வி சித்தப்பாவை அதிர்ச்சியடையவைத்தது. “என்ன கேக்கறமா நீ? தாலி அறுத்தவுங்க எப்படிக் கல்யாணத்துக்கு வருவாங்க? அது அபசகுனம் இல்லையா?”, அவர் சொன்னது எனக்குப் புரியவே சில நிமிடங்கள் பிடித்தது. அப்படியே உறைந்து போனேன்.

பெற்ற தாய் ஒரு பெண்ணுக்கு அபசகுனம் ஆவாரா? ஆக முடியுமா? என்ன ஒரு முட்டாள்தனமான நம்பிக்கை இது. திடீரென்று என் முன்னே இருந்த அனைவருமே காணாமல் போனார்கள். முகம் தெரியாத அந்த அம்மா மட்டும் தனியே தெரிந்தார். அவர் தன்னந்தனியே கணவர் துணை இல்லாமல் சோறு ஊட்டியபோது, “நீங்கள் ஊட்டாதீர்கள், அது அபசகுனம். நாங்கள் ஊட்டுகிறோம்” என்று யாராவது சொல்லியிருப்பார்களா? அவர் மகளைப் பள்ளிக்கு அனுப்பிய காலத்தில், “நீங்கள் படிக்க வைக்காதீர்கள், அது அபசகுனம். நாங்கள் படிக்கவைக்கிறோம்” என யாராவது முன்வந்திருப்பார்களா?

அதுகூட வேண்டாம். “கணவர் இல்லாத நீங்கள் அனுப்பிய நகைகள் அபசகுனம். சீர்செனத்திகள் அபசகுனம், அதனால் வேண்டாம்” என்று யாராவது திருப்பியனுப்பினார்களா? பெருமையாக எல்லோர் பார்வையிலும் படும்படிதானே அவற்றையெல்லாம் அடுக்கி வைத்திருக்கிறார்கள்? இந்தப் பாத்திரம் பண்டத்தில் வராத அபசகுனம் அந்த அம்மா நேரில் வந்தால் மட்டும் வந்துவிடுமா?

இதுவே அந்தப் பெண்ணின் அப்பா உயிருடன் இருந்து அம்மா இல்லாமல் இருந்திருந்தால் நிலைமையே தலை கீழாக அல்லவா இருந்திருக்கும்! அவரே முன்னின்று எல்லாவற்றையும் நடத்தியிருப்பார். கூடவே புது அம்மாவும் நின்றிருப்பார். “தாயில்லாத பெண்ணை நல்லா படிக்கவச்சு எப்பிடி கட்டிக் குடுத்துருக்கான் பாரு” என்று அவரைச் சகட்டுமேனிக்குப் புகழ்ந்து தள்ளியிருப்பார்கள். என்னவொரு விந்தையான உலகம் இது! உறவுகளை நல்ல முறையில் பேணி மகிழ்ச்சியாக வாழத்தெரிந்த இந்த மக்களுக்கு, ஒரு பெண்ணின் துயரம் மட்டும் புரியாமல் போனது எப்படி? பெற்ற மகளின் திருமணத்தைக் கண்குளிரப் பார்க்கமுடியாமல் அந்தத் தாயின் மனம் எப்படித் தவித்திருக்கும்? இன்னும் நெருடிக்கொண்டுதான் இருக்கிறது அந்த நிகழ்வு.

நன்றி -  தி.இந்து 
...மேலும்

பெண்ணியம் vimeo சேனல்

பெண் நிலை - வீடியோக்கள்